மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 15 - குறுந்தொடர்

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் கடந்த 30 நாள்களாக டிஜிட்டல் சினிமா பற்றிப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் - டிஜிட்டல் நிறுவனங்கள் இடையே மோதல் போக்கு முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி, தமிழ் சினிமா வர்த்தகத்தை, தயாரிப்பை முடக்கிப்போட்டுள்ளது. இந்த நிலையில் தத்தமது நிலைபாட்டை நியாயப்படுத்தி ஆடியோ, வீடியோ பதிவுகள் ஒவ்வொரு தரப்பைச் சார்ந்தவர்களிடமிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கியூப் நிறுவனம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில் “உலகிலேயே தமிழகத்தில்தான் சினிமா கட்டணம் குறைவாக இருக்கிறது. நிறைய வசதிகளைத் தயாரிப்பாளர்களுக்கு இலவசமாகவே நாங்கள் செய்திருக்கிறோம். தயாரிப்பாளர்கள் தேவையற்றுப் புலம்புகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கடுமையாகத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். “டிஜிட்டல் சினிமா வருகைக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சீரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த 12 வருடங்களில் சினிமா தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் கம்பெனிகளுக்கு 600 கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறோம். எங்கள் படங்களைத் திரையிடும் முன் விளம்பரங்கள் வெளியிட்ட வகையில் 400 கோடி ரூபாய் வருவாயாக உங்களுக்குக் கிடைத்துள்ளது. எங்கள் மூலம் 1,000 கோடி சம்பாதித்துள்ள நீங்கள் நேர்மையாக இவற்றுக்கு கணக்குக் கூறுங்கள்” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“கார்ப்பரேட் பாணியில் புத்திசாலித்தனமாக விவாதம் செய்வதையும், விளக்கம் சொல்வதையும் விட்டுவிட்டு யதார்த்தத்துக்கு வாருங்கள் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம்” என்கிறார் துரைராஜ்.

“2005இல் டிஜிட்டல் அறிமுகமானபோது தயாரிப்பாளர்களுக்கு ரிலீஸ் செலவு குறைந்தது உண்மைதான். அன்றைக்கு சினிமா உலகம் ஆரோக்கியமாக, வளமாக இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. எங்களுக்கு இலவசமாக எதுவும் தேவையில்லை. நீங்கள் எங்களுக்குச் செய்த சேவைக்கு அதிகமாகவே கட்டணம் செலுத்தியிருக்கிறோம். பத்து லட்ச ரூபாய் செலவில் இரண்டு முறை புரொஜக்டரை நிறுவியிருக்கிறீர்கள். இதற்குப் பராமரிப்புக் கட்டணமாக கியூப் நிறுவனத்துக்குப் பல லட்சங்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் கட்டியிருக்கிறார்கள். படங்களைத் திரையிட வாரந்தோறும் சுமார் 9,000 முதல் 12,000 ரூபாய் வரை ஒவ்வொரு தியேட்டருக்கும் பணம் செலுத்தியது எங்கள் தயாரிப்பாளர்களே” எனக் கூறும் துரைராஜ், “தமிழ்நாட்டில் உள்ள 1,100 தியேட்டர்களுக்கும் சேர்த்து 12 வருடங்களில் சுமார் ரூ.600 கோடி (12,000 x 52 x 1,100) பணத்தை, டிஜிட்டல் நிறுவனங்கள் வருவாயாகப் பெற்றுள்ளன. இதனுடன் விளம்பரத் திரையிடல் மூலம் ரூ.400 கோடி சேர்த்து 1,000 கோடியை எங்கள் மூலம் சம்பாதித்த டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது அநியாயம், தர்மத்துக்குப் புறம்பானது” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“உங்கள் வருகைக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் சிறு படத் தயாரிப்புகள் சிக்கலுக்கு உள்ளாயின. பிரின்ட் காலத்தில் 120 தியேட்டர்களில் பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருடக்கணக்கில் ஓடின. எஞ்சிய தியேட்டர்களில் பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தங்களுக்குப் பணம் கிடைத்தபோது தியேட்டருக்கு வந்து படம் பார்த்தனர். டிஜிட்டல் முறை வந்தபின் பெரிய நடிகர்களின் படங்கள் 300 முதல் 500 திரைகளில் திரையிட்டு ஒருவாரக் காலத்தில் படங்களின் ஆயுள் முடிந்துவிடுகிறது. நல்ல படங்களைக் காசு கிடைக்கிறபோது தியேட்டருக்கு வந்து பார்க்கும் வாய்ப்பு ஏழைகளுக்குக் கிடைக்காமலேயே போகிறது. பட்ஜெட் படங்களுக்குத் தியேட்டர் கிடைக்காமல் முடங்குகின்றன. டிஜிட்டல் வருகையால் முதலில் செலவு குறைந்தாலும், சினிமா சீரழிந்து சிக்கலைச் சந்தித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உங்களது சேவைக்கும், முதலீட்டுக்கும் பன்மடங்கு பணத்தை எங்கள் தயாரிப்பாளர்களிடம் பெற்றுள்ளீர்கள். அதற்கு நேர்மையாகக் கணக்குக் கூறவேண்டிய பொறுப்பும் கடமையும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இலவசமாக எங்களுக்கு எதுவும் வேண்டாம். நியாயம் தவறுகிறபோது தங்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்துக்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் எதிர்வினையாற்றத் தொடங்கினால் டிஜிட்டல் நிறுவனங்கள் தாங்காது” என எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர்கள் சங்க கெளரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ்.

ஏற்கெனவே இந்தக் குறுந்தொடரில் நாம் சொல்லியிருந்த விஷயங்களை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ், கியூப் நிறுவனத்துக்குச் சொல்லியிருக்கும் ஆடியோ பதிவில் வழிமொழிந்திருக்கிறார். இதிலுள்ள மேலும் பல விஷயங்களை நாளை காலை 7 மணிப் பதிப்பில் பார்க்கலாம்.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon