மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

என்னை கொன்னுடுவாங்க...!

என்னை கொன்னுடுவாங்க...!

2018-2019 ஆகிய இரண்டு வருடங்களில் ஒரு திரைப்படம் மட்டுமே காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து தமிழில் வெளியாகியிருக்கிறது. தமிழில் காஜலின் மார்க்கெட் அவுட் ஆகிவிட்டதாகவும், அவரது இடத்தை நிரப்ப பல ஹீரோயின்கள் வந்துவிட்டதாகவும் கோடம்பாக்கம் பேசினாலும் கையில் பல புது முயற்சிகளைக் கையில் வைத்துக்கொண்டு 2020க்காக காத்துக்கொண்டிருக்கிறார் காஜல்.

மும்பையிலுள்ள துணிக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட காஜல் அகர்வால் தன்னிடம் இருக்கும் புராஜெக்டுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கும் இந்தியன் 2, ஜான் ஆபிரஹாம் மற்றும் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடிக்கும் மும்பை சஹா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் வெப் சீரீஸ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வரும் துல்கர் சல்மானுடன் ஒரு படம் என 2020இல் காஜலுக்கு நிறைய புராஜெக்டுகள் கையில் இருக்கின்றன.

காஜல் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது எதிர்காலம் குறித்து கேட்டபோது “என்னுடைய எதிர்காலம் ரொம்பவே பிரைட்டா இருக்கு. சீனியர் நடிகர்களில் இருந்து, இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் அளவுக்கு என் மார்க்கெட் இருப்பது நல்ல விஷயம்” என்கிறார். இந்தியா முழுவதிலுமிருந்தும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து கேட்டபோது “என்னுடைய வாழ்நாளில் இப்படியொரு படத்தில் நடித்ததில்லை. என் லெவலே வேறு தளத்துக்கு செல்லும் அளவுக்கு நடித்திருக்கிறேன். வேறு எதுவும் இப்போதைக்கு சொல்லமுடியாது. சொன்னால், என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று கூறி கண்ணடிக்கிறார் காஜல்.

திரைப்படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிப்பேன் என்று சொல்லாமல் வெப் சீரீஸ் களத்துக்குள் நுழைவதும், தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டதால் இளம் ஹீரோக்களுடன் நடிக்கமாட்டேன் என்று சொல்லாமல் துல்கர் மாதிரியான ஹாட் ஹீரோக்களுடன் நடிப்பதும் காஜலுக்கு இன்னும் சில வருடங்கள் திரையுலகில் மார்க்கெட் குறையாது எனச் சொல்லாமல் சொல்கின்றன.

வியாழன், 16 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon