மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

கேம் சேஞ்சர்: இந்தியாவின் பழிக்குப் பழி!

கேம் சேஞ்சர்: இந்தியாவின் பழிக்குப் பழி!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி நேற்று(17.01.2020) ராஜ்கோட்டில் நடைபெற்றது. 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்று தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆஸ்திரேலிய பவுலர்களின் திட்டங்களை சிதறடித்து 50 ஓவர்கள் முடிவில் 340 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா.

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டகாரர்களான, டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஜோடி ஆட்டம் துவங்கிய 4ஆவது ஓவரிலேயே வெறும் 20 ரன்களுக்கு தகர்க்கப்பட்டது. ஷமி வீசிய பந்தை, வார்னர் பவுண்டரியை நோக்கி அடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் மனிஷ் பாண்டே ஒரு கையில் பிடித்த கேட்ச் போட்டியின் பாதையை நகர்த்தியது. அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய கேப்டன் ஃபிஞ்ச், 16ஆவது ஓவரில் 33 ரன்களுக்கு வெளியேறினார்.

டெஸ்ட் போட்டி சராசரியில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்டீவ் மற்றும் மார்னஸ் ஸ்கோரை சீராக உயர்த்தினார்கள். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 96 ரன்களை சேர்த்தனர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில், ஷமியிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார் மார்னஸ். ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், குல்தீப் யாதவ் வீசிய 38ஆவது ஓவரில் பெய்ல்ஸ் பறக்க, கிளீன் பவுல்டு ஆனார். 38ஆவது ஓவரில் அலெக்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என அடுத்தடுத்த விக்கெட்டுகளை யாதவ் கைப்பற்றியது ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தது.

குல்தீப் யாதவ்வை மிஞ்சும் வகையில், முகமது ஷமி வீசிய 44ஆவது ஓவரில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் யார்க்கர் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்ற போட்டியில் இந்தியா எப்படி 49.1 ஆவது ஓவரில் ஆல்-அவுட் ஆகியதோ, அதேபோல் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் 304 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து49ஆவது ஓவரில் ஆல்-அவுட் ஆனது.

வெறும் 52 பந்துகளில் அதிரடியாக 80 ரன்களை சேர்த்த கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டு முதல் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளில், இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக நான்கு முறை ஆஸ்திரேலியாவுடன் தோற்றப்பிறகு, இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், "நாங்கள் இந்தத் தோல்வியை எதிர்பார்க்கவில்லை,. ஸ்மித் மற்றும் அலெக்ஸ் களத்தில் இறுதிவரை இருந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.

வெற்றிபெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "சோசியல் மீடியா காலத்தில் வாழும் நாம், அதி சீக்கிரம் பதற்றம் அடைந்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன். கே.எல்.ராகுல் போன்ற வீரரை அவ்வளவு சீக்கிரம் அணியிலிருந்து எடுத்துவிட முடியாது. அவர் இன்று விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கும் போது அவர் 3 டைமென்ஷனல் (டெஸ்ட்-ஒருநாள்-டி20) வீரராக உருவெடுத்துவிட்டார் என்று தெரிகிறது. இன்று பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். எப்போது எந்த வகையான பந்துகளைப் போட வேண்டும் என்று நன்கு அறிந்திருந்தார்கள்" என்று கூறியிருக்கிறார்.

சனி, 18 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon