மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

சைக்கோ: பட புரமோஷனுக்காக ஒரு குறும்படம்!

சைக்கோ: பட புரமோஷனுக்காக ஒரு குறும்படம்!

ஜனவரி 24 அன்று திரைக்கு வர இருக்கும் சைக்கோ திரைப்படத்தின் விளம்பரம் கடந்த நவம்பர் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் மிஷ்கினுடன் இணைந்து குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குறும்பட போட்டியின் விதிமுறைகள், ‘சைக்கோ பற்றிய கதையாக இருக்க வேண்டும். குறும்படத்தில் கண்டிப்பாக ஒரு ஆண் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்க வேண்டும். குறும்படம் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வசனங்களின்றி சலன திரைப்படமாக(silent film) இருக்க வேண்டும். மொபைலில் படமாக்கப்பட்டிருக்க வேண்டும். சைக்கோ படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் இசையை பயன்படுத்திக்கொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. குறும்படம் வரும் ஜனவரி 27க்குள் இன்ஸ்டாகிராமில் #PSYCHOSHORTFILMCONTEST என்ற ஹேஷ்டாக்கில் பதிவேற்ற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மூன்று இடங்களில் வரும் குறும்படங்கள் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும். நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து, சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்த தமிழ் திரையுலகில் எண்ணற்ற வழிகள் பின்பற்றப்பட்டு வந்த சூழலில், சைக்கோ படக்குழு வித்தியாசமாக குறும்படப் போட்டி அறிவித்துள்ளது சினிமா பிரியர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் குறும்பட போட்டி அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் நடிக்கும் சைக்கோ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்க்காக அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார்.

திங்கள், 20 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon