மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

கீர்த்திக்கு பதில் பிரியாமணி

கீர்த்திக்கு பதில் பிரியாமணி

பல நடிகைகளின் மார்க்கெட் கேள்விக் குறியாவதற்கும், அவர்களது வாய்ப்புகள் பறிபோகவும் காரணமாக இருந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், இன்று அவரது வாய்ப்பையே ஒருவர் தட்டிப் பறித்திருக்கிறார். அவர் பிரியாமணி.

பருத்திவீரனில் முத்திரை பதித்த பிரியாமணி, அதன்பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும்படியளவுக்கு நடிக்கவில்லை. ஹீரோயின் கேரக்டரை மையப்படுத்திய திரைப்படங்களில் நடிப்பது என அவர் எடுத்த முயற்சிகள் வீணாகிப் போக, இந்தித் திரையுலகின் பக்கம் சென்றவருக்கு பல வருடங்கள் கழித்து, ‘The Family Man’ என்ற அமேசான் பிரைம் சீரீஸ் மூலமாக ஒரு ஓப்பனிங் கிடைத்தது. The Family Man சீரீஸ் மூலம் கிடைத்த பெயரும், புகழும் இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்தாட்டத் திரைப்படமாக உருவாகும், அஜய் தேவ்கானின் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மைதான் திரைப்படத்தைத் தொடங்கியபோது, மகாநடி’ படத்துக்காக தேசிய விருது பெற்றிருந்த கீர்த்தி சுரேஷ் ஒரு கால்பந்தாட்ட வீராங்கனையின் அம்மா கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. டெஸ்ட் ஷூட் முடித்து எல்லாம் ஓகே செய்யப்பட்டு ஒரு நாள் ஷூட்டிங்கை முடித்து, அதனை போட்டுப் பார்த்தபோது தான் படக்குழுவினருக்கு அந்த மாற்றம் தெரிந்திருக்கிறது. டெஸ்ட் ஷூட்டின் போது இருந்ததைவிட, முதல் நாள் ஷூட்டிங்கில் கீர்த்தியின் எடை குறைவாக இருந்திருக்கிறது. அடுத்தடுத்து கமிட் ஆகியிருந்த படங்களுக்காக, டயட் மேற்கொண்டு உடல் எடையை கீர்த்தி குறைத்திருந்ததால், அந்த கேரக்டருக்குத் தேவையான தோற்றத்தைவிட மெல்லிய உடல்வாகுடன் காணப்பட்டிருக்கிறார் கீர்த்தி. உடல் எடை குறைந்ததால் வயது குறைந்தது போலவும் தோன்றியதால், கீர்த்தியிடம் நேரில் அழைத்துப் போட்டுக்காட்டியிருக்கிறது மைதான் படக்குழு.

தான் நடித்த வீடியோக்களைப் பார்த்த கீர்த்தி, தேசிய விருது வென்றவரான மைதான் படத்தின் இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் ஷர்மாவிடம், நான் இந்தப்படத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இதனால், வேறு ஹீரோயினைத் தேடச் சென்ற மைதான் படக்குழுவினர் நின்றது பிரியாமணி வீட்டில். கேரக்டரையும், திரைப்படத்தைப் பற்றியும் கூறியதும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பிரியாமணி.

செவ்வாய், 21 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon