மாடர்ன் உலகத்தின் அதிவேக மாறுதல்களால் பல விஷயங்களை இளசுகள் மறந்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதில் திருமணம் போன்ற நிகழ்வுகளும் சேர்ந்திருக்கின்றன. தங்கள் கனவுகள், லட்சியங்களை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது 30 வருட வாழ்க்கை முடிந்திருக்கிறது. இன்னொரு பக்கம், எவ்வளவு முயற்சி செய்தாலும் திருமணம் நடைபெறாமல் சிலர் காத்திருக்கின்றனர். அந்த தோஷம், இந்த தோஷம் எனச் சொல்லி எவ்வளவோ திருமணங்கள் தடைபடுகின்றன. மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பொருத்தம் இருப்பதைவிட, ஜாதகத்துக்குத் தான் அதிக பொருத்தம் தேவைப்படுகிறது. இப்படியெல்லாம் நடைபெறும் கூத்துகளை ஒன்றாக ஒரே படத்தில், புதிய வண்ணத்துடன் கொடுக்கத் தயாராகியிருக்கிறது ‘வரனே அவஷியமுண்டு’ திரைப்படம்.
துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் லீட் கேரக்டரில் நடிக்கும் இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா ஆகிய இருவரும் நடித்திருக்கின்றனர். எத்தனையோ மாப்பிள்ளைகளைப் பார்த்தும் திருமணம் நிச்சயமாகாத கல்யாணி, ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக இந்த முறை முடித்துவிடவேண்டும் என நினைப்பதும், அது ஏதோ ஒரு காரணத்தால் தவறிவிடுவதுமென கதை நகர்வதாய் டீசர் காட்டுகிறது.
துல்கருக்கும், கல்யாணிக்கும் ஒரு காட்சியே டீசரில் காட்டப்பட்டாலும், அந்த ஒரு காட்சியிலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி அசத்தலாக இருக்கிறது. சுரேஷ் கோபி - ஷோபனாவின் காட்சிப்படுத்துதல் அழகாக இருக்கிறது. முதிர்கன்னியாகவும், முதிர் இளைஞனாகவும் சித்தரிக்கப்படும் இந்த இருவரின் கேரக்டர்கள் துல்கர்-கல்யாணி கேரக்டரைவிட சிறப்பான வரவேற்பைப் பெறும் என்பது டீசரிலேயே தெரிகிறது.
‘வரனே அவஷியமுண்டு’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இத்திரைப்படம் தமிழிலும் வெளியாகிறது. சென்னையில் படபூஜையை நடத்தி ஷூட்டிங்கைத் தொடங்கியபோதே இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்ந்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.