மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஸ்மார்ட்ஃபோன் ரேஸில் Motorola Razr!

ஸ்மார்ட்ஃபோன் ரேஸில் Motorola Razr!

2020ஆம் ஆண்டு துவங்கியவுடன், ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் பல்வேறு புது வகையான ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பிப்ரவரி மாதம் சாம்சங், ஷியோமி போன்ற நிறுவனங்கள் வெளியிடப்போகும் ஸ்மார்ட்ஃபோன்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பேச்சையெல்லாம் காலி செய்திருக்கிறது மோட்டோ நிறுவனம்.

மடக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்களில்  இதுவரை தொடுதிரை கொண்டு செங்குத்தான வடிவமைப்பில் எதுவும் வெளிவந்ததில்லை. ஆனால், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், லாஸ் ஏஞ்செலஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் வெளியிடப்பட்ட மோட்டோ நிறுவனத்தின் 'Razr' என்ற ஸ்மார்ட்ஃபோன், தொடுதிரை பொருத்தப்பட்டு மடக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 11ஆம் தேதி தன்னுடைய புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தும் என்று தன்னுடைய  டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால், மோட்டோ நிறுவனத்தின் 'Razr' ஸ்மார்ட்ஃபோன் பிப்ரவரி 6ஆம் தேதியே வெளிவரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு செய்யும் தேதி இன்று(26.01.2020) ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு இரண்டு டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போனிற்கு வரும் மெசேஜ் மற்றும் தகவல்களை, ஃபோன் திறையை திறக்காமல் பார்ப்பதற்கு வெளியே 2.1 இன்ச் டிஸ்பிளேவும், போனிற்கு உள்ளே  6.2 இன்ச் டிஸ்பிளேவும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் மடங்கும் போது, இரு திரைகளும் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க 0.2mm இடைவெளி விட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் வெளியே 16 மெகா பிக்சலும், உள்ளே 5 மெகா பிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6GB RAM, 128 GB ஸ்டோரேஜ், பேட்டரி 2510 mAh கொண்டு C-டைப் சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டு வெளிவரவுள்ளது. மேலும் இதில் 4K தரத்தில் வீடியோவை பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இந்த 'Razr' இந்திய பணமதிப்பீட்டின்படி 1 லட்சத்திற்கு விற்கப்பட்டது என்பதால், இந்தியாவில் மேலும் கூடுதல் விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon