மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

ரியல் வெறித்தனம்: மாஸ்டர் போஸ்டரின் ஹிட்!

ரியல் வெறித்தனம்: மாஸ்டர் போஸ்டரின் ஹிட்!வெற்றிநடை போடும் தமிழகம்

விஜய்-விஜய்சேதுபதி ஆகிய இருவரும் நேருக்கு நேர் வெறியுடன் பார்த்துக்கொள்ளும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்கவைத்துள்ளது. இந்த போஸ்டரில் விஜய்-விஜய்சேதுபதி ஆகிய இருவரும் ரத்த காயங்களுடன் ஆக்ரோஷமாக முறைத்தபடி சண்டை செய்யும்படியான காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதியின் கேரக்டர் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிட்ட சில நேரத்திலே சோஷியல் மீடியாக்கள் முழுவதும் கொண்டாடப்பட்டும் வருகிறது. விஜய்சேதுபதி இந்த போஸ்டரில் கழுத்தில் சிலுவை, மாலை, தாயத்து என மூன்று மதங்களையும் குறிப்பது போலான தோற்றத்தில் இருக்கிறார். இவ்வளவு ஆக்ரோஷமான விஜய் சேதுபதியை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிலும், இருவரும் சட்டை இல்லாமல் இருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன.

இந்த மூன்றாவது லுக் போஸ்டரை, தயாரிக்கும் நிறுவனம் மட்டும் அல்லாது விஜய், விஜய்சேதுபதி, இயக்குநர் லோகேஷ், மற்றும் படக்குழுவினர் பலர் இதனை தனித் தனியே வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த பொங்கல் அன்று வெளியாகிய இரண்டாவது லுக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியின் லுக் இடம்பெறவில்லை. மாறாக கடந்த இரண்டு போஸ்டர்களும் விஜய்யின் லுக்கை காட்டும் விதத்திலேயே போஸ்டர்கள் அமைந்தன. இந்த ஏமாற்றத்தை மாற்றும் விதத்தில் முற்றிலும் உச்சகட்ட விருந்தாகவும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியாகவும் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை டிசைன் செய்த டிசைனர் கோபி பிரசன்னாவுக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படம் முடிவடைவதற்கு முன்பே கிட்டத்தட்ட 200 கோடி வரையில் உலகளவில் விற்பனையாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போகிறது. வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon