மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’!

பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’!வெற்றிநடை போடும் தமிழகம்

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் திரைப்படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கிளியும், கொடிவீரனும் திரைப்படம் உருவாகத் தொடங்கியபோது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், பாரதிராஜா தேர்ந்தெடுத்திருந்த கதைக்களம். ஆனால், இப்போது உருவாக்கும் மீண்டும் ஒரு மரியாதை எந்த கதையை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்த குழப்பத்திலிருந்து ரசிகர்களை விடுவிக்கும் விதத்தில், படம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாகக் கொண்டதாகவும் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.

அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்‌ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வைரமுத்துவின் வரிகளில் பாரதிராஜாவின் படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணமடைவதற்கு முன்பு அவரிடமிருந்து பெறப்பட்ட ஒரு பாடலையும் இந்தப்படத்தில் வைத்திருக்கிறார் பாரதிராஜா.

ஒரு காலத்தில் சினிமாவில் கோலாச்சிய பாரதிராஜா மாதிரியான இயக்குநர்கள் திரைப்படம் எடுக்க மீண்டும் முனையும் போது ஏற்படும் சில பிரச்னைகள் இந்தப்படத்தில் இருந்தாலும், என்ன செய்கிறார் எனப் பார்ப்போம் என்ற குறுகுறுப்பு ஏற்படுவதையும் தடுக்கமுடியவில்லை.

சபேஷ் – முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார். மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon