மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

மாஸ்டர் பிளான்: வொர்க் அவுட் ஆனது யார் ஐடியா?

மாஸ்டர் பிளான்: வொர்க் அவுட் ஆனது யார் ஐடியா?

தமிழ் சினிமா பல்வேறு மாற்றங்களை, அதிரடி சம்பவங்களைக் கடந்து வந்திருக்கிறது. எப்போதும் தமிழ் சினிமாவில் முதலிடம் யாருக்கு என்கிற போட்டி எம்ஜிஆர் - சிவாஜி; ரஜினி - கமல்; அஜித் - விஜய் காலம் வரை விவாதப் பொருளாக இருந்து வருகிறது. வசூல் ரீதியாக மக்கள் செல்வாக்கு அடிப்படையில் இவை தீர்மானிக்கப்பட்டு வந்தாலும் சினிமா வியாபாரிகள் தாங்கள் செய்கின்ற முதலீடு, அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் இவற்றை வைத்தே முதலிடம் யாருக்கு என்பதைத் தீர்மானிப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த முதலிடம் யாருக்கு என்பதில் இழுபறியாக இருந்து வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓரங்கட்டப்பட்டு அந்த இடத்துக்கு நடிகர் விஜய் வந்துவிட்டார் என்பதை தெறி, மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் நிரூபித்திருக்கிறார். அதே காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, காலா, 2.0, பேட்ட தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் தர்பார் ஆகிய படங்கள் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், படத்தைத் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்புக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பேட்ட விநியோக முறையில் திரையிடப்பட்டதனால் விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை.

விஜய் நடிப்பில் வெளியான மேற்குறிப்பிட்ட நான்கு படங்களும் 100 கோடியைக் கடந்தவை. கடைசியாக வந்த பிகில், தமிழகத்தில் 150 கோடி ரூபாய் மொத்த வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இருந்தபோதிலும் இந்தப் படங்களின் மூலம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் நியாயமான லாபத்தைப் பெறவில்லை என்பதை மறுக்க முடியாது. இதற்கு என்ன காரணம் என்பதை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி தன் வளர்ச்சியை நேர்மையோடு கவனித்து வரும் நண்பர்களிடம் விவாதித்து எடுத்த முடிவுதான் ‘மாஸ்டர்’ திரைப்படத் தயாரிப்பு என்கிறது விஜய் தரப்பு. இந்தப் பரிசோதனை முயற்சியைப் பிற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் மூலமாகப் பரிசோதிக்க விஜய் விரும்பவில்லை.

தான் கதாநாயகனாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அன்றைய சூழ்நிலையில் விஜய் நடித்த படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளராக முதலீடு செய்தவர்தான் அவரது மாமா சேவியர் பிரிட்டோ. அன்றைய சூழ்நிலையில் அறிமுக நாயகனாக விஜய் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. நஷ்டத்தை ஏற்படுத்தியது. மாமா பிரிட்டோ, பல்வேறு தொழில்களை நடத்தி வந்தவர். சினிமா தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் அவரை பாதிக்கவில்லை.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்த சூழலில் விஜய் நடிக்கும் படங்களைத் தயாரிக்க பிரிட்டோ அவரிடம் கால்ஷீட் கேட்கவில்லை. தற்போது அவர் தொழில் ரீதியாகப் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை அறிந்த விஜய், தனது பரிசோதனை முயற்சி படத்தை நன்றிக்கடனாக மாமா பிரிட்டோ மூலம் தயாரிக்க எடுத்த முடிவுதான் மாஸ்டர் படம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

சினிமா தயாரிப்பு அதற்கான முதலீடு இவற்றை ஒருங்கிணைப்பதில் பிரிட்டோவுக்குப் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து அதை எந்தவிதப் பிரச்சினையும் இன்றி தகுதியான நபர்களுக்கு வியாபாரம் செய்ய வேண்டும். அதே நேரம் படம் வாங்குகின்ற விநியோகஸ்தர்களுக்கு உத்தரவாதமான லாபம் கிடைக்க வேண்டும். பெருத்த லாபத்தைத் தயாரிப்பாளர் மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தார் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

மாஸ்டர் படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரிப்பதற்கு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், வேல்ஸ் மூவிஸ் ஐசரி கணேஷ், கலைப்புலி தாணு ஆகியோர் போட்டி போட்டனர். இவர்கள் அனைவரையும் தவிர்த்து, படத்தைத் தயாரிப்பது, வியாபாரம் செய்வது, எந்த ஒரு நெருக்கடி வந்தாலும் அதை சங்கடமின்றி தீர்க்கக்கூடியவரிடம் படத் தயாரிப்பு பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது விஜய் விருப்பமாக இருந்தது.

பொதுவாக விஜய் படங்களை இதுவரை தயாரித்த தயாரிப்பாளர்கள் இயக்குநரின் விருப்பப்படி, ஏன், எதற்கு என்ற கேள்வி எதுவும் கேட்காமல் செலவு செய்ததால் தனது படங்களின் செலவு அதிகரித்தது. அதற்கு தானும் ஒரு காரணமாக இருந்ததைத் தாமதமாகப் புரிந்துகொண்ட நடிகர் விஜய், இதுவரை நடந்த தவறுகள் அனைத்தையும் மாஸ்டர் படத்தில் தவிர்க்க விரும்பினார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

பிற தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்கும்போது மிகப்பெரிய தொகை ‘கதாநாயகன் அட்வான்ஸ்’ என்பதன் பெயரால் கொடுக்கப்படும். அப்படி ஒரு சூழல் மாஸ்டர் படத்தில் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று அட்லீ, முருகதாஸ் போன்றவர்கள் கேட்ட சம்பளம் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் கேட்கவில்லை என்பதோடு அவர்களைப் போன்று பிரமாண்டமான பட்ஜெட் செலவைக் கொடுக்கவில்லை. இந்த சாதகமான அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய தயாரிப்பாளராக விஜய் தேர்வு செய்தது லலித்குமார் என்பவரை. இவர் ஏற்கெனவே சசிகுமார் நாயகனாக நடித்து வெளியான ‘அசுரகுலம்’ படத்தைத் தயாரித்தவர். விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அதைச் சமாளித்து அதன் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர். தற்போது விக்ரம் நடித்துவரும் கோப்ரா படத்தைத் தயாரித்து வருகிறார். இவரிடம் தயாரிப்பு பொறுப்பு ஒப்படைக்கும்போது நடிகர் விஜய் வைத்த கோரிக்கை ‘பிரிட்டோ அவர்களுக்கு நியாயமான லாபம் வழங்க வேண்டும்.

தமிழக திரையரங்கு உரிமையை ஏதோ ஒரு நிறுவனத்துக்கோ, தனிநபருக்கு மொத்தமாகவோ வழங்கக் கூடாது’ என்பதுதான்.

மேலும், ‘ஏரியா அடிப்படையில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். அந்த விலை என்பது லாபம் பெற்றுத் தரக்கூடிய அளவுக்கு நியாயமாக இருக்க வேண்டும். படப்பிடிப்பு முடிவதற்குள் குறிப்பாக ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து வியாபாரங்களும் முடிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். படத்தின் தயாரிப்பு செலவு தேவையின்றி அதிகரிக்கப்பட கூடாது. யாராக இருந்தாலும் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்கிற சுதந்திரம் தயாரிப்பாளருக்கு விஜய் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் விருப்பப்படி தமிழக உரிமை தனிநபருக்கு வழங்கப்படாமல் ஏரியா அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக பிகில் திரைப்படத்தின் மூலம் என்ன வருவாய் கிடைத்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு விலை தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிகில் தமிழகத்தில் சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு விநியோகஸ்தர்களுக்கு வருமானத்தைப் பெற்றுத்தந்தது. அதே அளவில் மாஸ்டர் படத்தின் விலை தீர்மானிக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் இதுவரை படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே அனைத்து உரிமைகளும் வியாபாரம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது இல்லை. அந்த சாதனையை மாஸ்டர் படத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் ஆர்ப்பாட்டமின்றி அரங்கேற்றி இருக்கிறார் என்றே கூறலாம். விஜய் நடித்த படங்களெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு கடைசிவரை வருமா, வராதா என்ற பதற்றத்தைக் கடந்த ஐந்தாண்டுகளாக ஏற்படுத்தி வந்தது. அதற்காக விஜய் தனது சம்பளத்தில் கணிசமான தொகையை விட்டுக்கொடுத்த சம்பவங்களும் நடைபெற்றது. இப்படிப்பட்ட எந்த சிக்கலும் இல்லாமல் படப்பிடிப்பு, பட வியாபாரம் இரண்டையும் சுமுகமாக முடித்திருக்கிற லலித்குமார் அவர்களை, ‘மாஸ்டர் படத்திற்கு நான் ஒரு மாஸ்டர் பிளான் போட்டேன். அதைவிட ஒரு மாஸ்டர் பிளான் போட்டு என்னை அசத்தி விட்டீர்கள்’ என்று மனந்திறந்து பாராட்டினார் விஜய் என்கிறது உதவி இயக்குநர்கள் வட்டாரம்.

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அதற்கான அட்வான்ஸ் அதற்குரிய வட்டி என்று பட்ஜெட் அதிகரிப்பதால் படத்தின் விலை அதிகரிக்கிறது என்பதை விஜய் தரப்புக்கு லலித்குமார் புரிய வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் இதுபோன்று திட்டமிட்டு படம் தயாரிக்கும் பட்சத்தில் எல்லா தரப்புக்கும் லாபம் கிடைக்கும் என்பதற்கான மாதிரி புரொஜக்டாக ‘மாஸ்டர்’ படம் இருக்கும் என்கிற தயாரிப்பு வட்டாரம். இதே பாணியில் படங்களில் நடிக்கவிருப்பதாகக் கூறுகின்றனர்.

தமிழ் சினிமா கதாநாயகர்களுக்குப் புதிய பார்முலாவை ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கும் நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் வியாபாரம், வசூல் இவற்றில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கி, அதை மற்ற நடிகர்களும் பின்பற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். அதேவேளை தனது நீண்ட நாள் கனவான வியாபாரம், வசூல் இரண்டிலும் தான்தான் முதலிடம் என்பதை தயாரிப்பாளர் லலித்குமார் மூலம் அரங்கேற்றி இருப்பதால் இதே கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

- இராமானுஜம்

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

3 நிமிட வாசிப்பு

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

3 நிமிட வாசிப்பு

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

திங்கள் 27 ஜன 2020