மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

வியூவ்சிலும் மிரட்டும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்!

வியூவ்சிலும் மிரட்டும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்!

விஷ்ணு விஷால், கெளதம் மேனன் இணைந்து நடித்திருக்கும் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் எஃப்ஐஆர் - ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’. இயக்குநர் கெளதம் மேனன் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி 16 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

‘அஞ்சு முறை நமாஸ் எல்லாம் பன்ணுற, ரிலீஜியஸாடா நீ? மதத்துக்காக என்ன வேணா பண்ணுவ’ என்று காவல் அதிகாரி ஒருவர் குற்றவாளியை விசாரிப்பதாக ஆரம்பமாகும் டீசரில் விஷ்ணு விஷால் முஸ்லீமாக நடித்துள்ளார். ‘அபு பக்கர் அப்துல்லா ’ என்னும் குற்றவாளிக்கான தேடுதல் வேட்டையாக திரைப்படம் அமைந்துள்ளது என்பது டீசரின் மூலம் தெரிகிறது. டீசரில் இடம்பெறும் கெளதம் மேனனின் தோற்றமும் கவனம் ஈர்த்துள்ளது. இறுதியில், ‘தினமும் அஞ்சு முறை நமாஸ் பண்ணி கடவுளை கும்பிட்டா, அதுக்கு அர்த்தம் மதவெறி கொண்ட தீவிரவாதின்னு இல்ல சார்’ என்று விஷ்ணு விஷால் பேசும் வசனம் இடம்பெறுகிறது. தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் மிக முக்கியமான பல பிரச்னைகளைப் பேசவருவதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும் ரைஸா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படை வெல்லும், தூங்கா நகரம், சிகரம் தொடு, போன்ற திரைப்படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அஷ்வத் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டீசரின் மூலமாக திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon