மின்னம்பலம்
2019-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற சில்லுக்கருப்பட்டி திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிவைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. ஆந்தாலஜி வகையில் நான்கு கதைகளின் தொகுப்பாக வெளியான இந்தத் திரைப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கியிருந்தார். பிரதீப் குமார் இசையமைத்த இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன், நிவேதிதா உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
உறவுகளையும், அன்பையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி திரைப்படங்களைத் தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஏலே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் விக்ரம் வேதா திரைப்படம் மூலம் பிரபலமான புஷ்கர்-காயத்ரி இணையர் இந்தத் திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்திற்கு கேபர் வாசுகி இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டரை வெளியிட்ட ஹலீதா ஷமீம், படம் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
For those who are asking about my next film, here is the poster! #Aelay is in the post production stage and will be ready soon. 🙏🏼 pic.twitter.com/VXCNV90669
— Halitha (@halithashameem) January 27, 2020
இந்தநிலையில், ஏலே திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர். ஹலீதா ஷமீம் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘பூவரசம் பீப்பி’, ‘சில்லிக்கருப்பட்டி’ ஆகிய இரு திரைப்படங்களிலும் ‘ஏலே’ திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் இருப்பதாக ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர, இயக்குநரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இது திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.