மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

விஜய் சொல்லும் குட்டிக் கதையின் பின்னணி!

விஜய் சொல்லும் குட்டிக் கதையின் பின்னணி!

பிகில் திரைப்படத்தின் 300 கோடி வெற்றி தொடர்பாக நடிகர் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம், ஃபைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டுகளில் முடிவில் 300 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கலாம் என வருமான வரித் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, நேரில் ஆஜராகி வருமான வரித் துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மூன்று பேருக்கும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சம்மனுக்கு பதிலளிக்க மூன்று தரப்பினரின் ஆடிட்டர்கள் மட்டும் நேற்று(11.02.2020) நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகினார்கள்.

விசாரணையின்போது என்ன நடந்தது என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது “சோதனையின் போது மீட்கப்பட்ட ஆவணங்கள், சமீபத்தில் வாங்கப்பட்ட சொத்துகள், வங்கிக் கணக்கில் இருக்கும் பணம், அது கிடைத்த விதம், அதற்கான வரி விகிதம் என எல்லா தகவல்களுடனும் மூன்று தரப்பினர்களின் ஆடிட்டர்களும் வருமான வரித் துறை அலுவலகத்துக்குச் சென்றதும் சமர்ப்பித்தார்கள். தொடர்புடையவர்கள் வரவில்லையா என்று கேட்டு, முறைப்படி கேட்கவேண்டிய சில தகவல்கள் கேட்கப்பட்டது. அனைத்தையும் கொடுத்துவிட்டு, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் என்ன தகவல் வேண்டுமென்றாலும் எங்களைக் கேளுங்கள் நாங்களே தருகிறோம் என்று ஆடிட்டர் தரப்பில் சொல்லப்பட, ‘ஏன் அவர்களைக் கூப்பிட்டுக் கேட்கக்கூடாதா’ என்று சூடான ஒரு விவாதம் அங்கே எழுந்தது. ஆனால், அதற்குள்ளாக அங்கே இருந்தவர்கள் சுதாரித்து, ‘என்ன நடக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும். நீங்க வேற ஏன்?’ என்று கேட்டுவிட்டு ஆடிட்டர்களை அனுப்பினார்கள்’ என்றார்.

எவ்வித கெடுபிடியும் இல்லாத சாதாரண விசாரணை தான் என்பது விஜய்க்கு சொல்லப்பட உடனே ‘ஒரு குட்டி கதை சொல்லட்டுமா’ என்ற சிங்கிள் பாடலை வெளியிடும் நிகழ்வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் விஜய். ரெய்டு நடைபெற்ற தினத்துக்குப் பிறகு, இந்த பிரச்சினைக்கும் விஜய்க்குமான தொடர்பு முழுமையாக முடிந்துவிட்டது. இதன்பின் நடைபெறவேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை விஜய், கல்பாத்தி அகோரம், அன்புச்செழியன் ஆகியோரது ஆடிட்டர்கள் மற்றும் வக்கீல்களே பார்த்துக்கொள்ளலாம். அவர்கள் யாரும் நேரில் ஆஜராகவேண்டியது இல்லை. இவ்வளவு பெரிய ரைடுக்குப் பிறகு அனுப்பிய சம்மன் என்பதால், விஜய்யே வருகிறாரா என பார்ப்பதற்காக இந்த வலையை விரித்திருக்கிறார்கள். ஆனால், இதையே அரசியல் மைலேஜாகப் பயன்படுத்த விஜய்க்கு சில ஐடியாக்களைக் கொடுத்திருக்கின்றனர் அரசியல் அனுபவம் பெற்றிருக்கும் சிலர்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ரசிகர்களை தனது சொந்த பிரச்சினைகளுக்காக பெருமளவில் கூட்டுவது பலருக்கும் உடன்பாடில்லை. எனவே தான் விஜய்யின் செல்ஃபியை அதிகளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, ‘சினிமாவையும், அரசியலையும் குழப்பிக் கொள்பவர்கள் தான் இதுபோல ரசிகர்களை வைத்து தங்களது சொந்தப் பிரச்சினைக்கு ஆதாயம் தேடுவார்கள். கமல் வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு சென்ற போது, எந்த ரசிகனும் தலையிடக்கூடாது என்று கூறினார் கமல். அதையும் மீறி கோயமுத்தூரில் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் போராட்டம் செய்ய, அவரை ரசிகர் மன்ற பதவியிலிருந்தே எடுத்துவிட்டார் கமல். ஆனால், ரஜினிகாந்தின் வீட்டில் ரெய்டுக்கு சென்றபோது, பல வாரங்கள் கழித்து வெளியே வந்து குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பேசிவிட்டுக் கிளம்பினார் ரஜினி. இதுபோல, பர்சனல் பிரச்சினைகளுக்காக ரசிகர்களை விஜய் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது” என்று திரைத்துறையின் சீனியர்கள் வருத்தப்படுகின்றனர். விஜய்யின் இந்த செயல்களால் அவரது படத்துக்குப் பிரச்சினை வந்தால் படத்தை பணம் கொடுத்து வாங்குபவர்களுக்குத் தான் பிரச்சினை. அவர் சம்பளத்தை வாங்கிக்கொண்டு சைலண்டாக போய்விடுவார் என்கின்றனர்.

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon