மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

அமெரிக்காவில் பட்டையைக் கிளப்பிய ‘பேட்ட’ பாடல்!

அமெரிக்காவில் பட்டையைக் கிளப்பிய  ‘பேட்ட’ பாடல்!

பன்முகத்தன்மை கொண்ட திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்று அமெரிக்காஸ் காட் டேலண்ட்(America's Got Talent). உலக அளவில் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடனக்குழுவினர் பேட்ட படத்தில் இடம்பெற்ற ‘மரணமாஸ்’ பாடலுக்கு நடனமாடி இணைய உலகில் மாஸ் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து மட்டுமின்றி உலக அளவில் சிறந்த திறமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் கூட சிலர் கலந்து கொண்டு உலக அரங்கில் அங்கீகாரமும், புகழும் பெற்றுள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற NBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அமெரிக்காஸ் காட் டேலண்ட்’ நிகழ்ச்சியில் இந்தியாவின் மும்பையில் இருந்தும் ஒரு நடனக்குழு கலந்துகொண்டது.

இந்தியாவைச் சேர்ந்த ‘வி அன்பீட்டபிள்’ குழுவினர், இந்தியப் பாடல்களுக்கு அமெரிக்க மேடையில் நடனமாடி அனைவரையும் கவர்ந்து வந்தனர். இந்தியாவின் இளம் சாதனையாளர்களாகப் புகழப்பட்ட ‘வி அன்பீட்டபிள்’ நடனக் குழுவினர் AGT நிகழ்ச்சியின் இறுதிபோட்டி வரையிலும் முன்னேறினர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இறுதி சுற்றில் அவர்கள் ஆடிய நடனம் தான் தற்போது இணைய உலகின் வைரல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

‘கெத்தா நடந்து வர்றான், கேட்ட எல்லாம் கடந்து வர்றான்’ என்று பேட்ட படத்தில் இடம்பெற்ற மரணமாஸ் பாடலுக்கு, வேற லெவல் ஆட்டத்தை அரங்கேற்றி அமெரிக்காவிலும் மாஸ் காட்டியுள்ளனர். அனிருத் இசையில் அமைந்த இந்த பாடல் விசில் சத்தத்தோடு ஃபாஸ்ட் பீட் ஆரம்பமானபோதே நடுவர்கள் தங்களை மறந்து எழுந்துவிட்டனர். பாடலின் இசையும், ‘வி அன்பீட்டபிள்’ குழுவின் நிஜமாகவே பீட் செய்ய முடியாத நடனமும் சேர்ந்து அரங்கத்தையே அதிரவைத்தது.

இரண்டரை நிமிடத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற மேடையில், ‘மரண மாஸ்’ பாடலை இவர்கள் ஆடி முடித்ததும் அரங்கமே எழுந்துநின்று கைதட்டியது. இதுகுறித்து நடுவர்களுள் ஒருவர் கூறும்போது ‘இதுவரை நடந்த ‘அமெரிக்காஸ் காட் டேலண்ட்’-இன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த நடனம் தான் சிறந்தது’ என்று உற்சாகத்துடன் பாராட்டினார்.

இத்தனை சிறப்பாக நடனமாடிய இந்திய இளைஞர்களையும், அவர்களை மிகச் சிறப்பாக ஆட வைத்த ‘மரண மாஸ்’ பாடலையும் உலக அரங்கில் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon