மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

‘பெண்களுக்காக’ அஜித்: காவல் துறையின் புது உத்தி!

‘பெண்களுக்காக’ அஜித்: காவல் துறையின் புது உத்தி!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடைசெய்யும் விதமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸார் ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். நடிகர் அஜித்தின் வசனங்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

‘பெண்’ என்ற ஒரே காரணத்துக்காக பிஞ்சுக் குழந்தைகள் கூடத் தொடர்ந்து பல கொடிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முகம் தெரியாத கயவர்கள் மட்டுமின்றி, நெருங்கிய உறவுகள் வரைப் பலரும் பெண்களைத் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றங்களும், பாலியல் பலாத்கார சம்பவங்களும் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே பெற்றோர் பயப்படுகின்றனர்.

இவ்வாறு பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களைக் குறைக்க தமிழக காவல்துறையினரும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். களத்தில் செயல்படுவதோடு மட்டுமின்றி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். சமீப காலமாக, சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் காவல்துறையினர், வீடியோக்கள் மற்றும் மீம்களின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில், இன்று(பிப்ரவரி 12) தூத்துக்குடி காவல்துறையினர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் அஜித் திரைப்படங்களில் பேசிய வசனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சிட்டிசன் படத்தில் இடம்பெறும், “ஒரு பொண்ணோட மனசு நோகுற படி கிண்டல் பண்றது, சைகை செய்யுறது, வண்டியில போகும் போது தொல்லை கொடுக்குறது, ஃபோன்ல அசிங்கமா பேசுறது, பொதுவா ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவள மனசளவில பாதிக்கிற எல்லா விஷயமுமே ஈவ் டீசிங் தான்” என்ற வசனமும்,

வேதாளம் படத்தில் இடம்பெற்ற, “நம்ம நாட்டில ஏன் தெரியுமா சார் பொண்ணுங்க முன்னாடி போக முடியல? பின்னாடி எவன் வர்றாங்கிற பயத்தில தான் சார். போகட்டும் சார் பொண்ணுங்க. ஸ்கூலுக்குப் போகட்டும், காலேஜுக்குப் போகட்டும், வேலைக்குப் போகட்டும், நிம்மதியா. உங்களுக்கு ஒரு பொண்ண புடிச்சிருந்தா தைரியமா போய் சொல்லுங்க. அவங்களுக்கும் உங்கள புடிச்சா கல்யாணம். புடிக்கலையா விரட்டி, துரத்தி ஒத்துக்க வைக்கிறவன் ஆம்பிள இல்ல சார். அவ உணர்வ மதிச்சு ஒதுங்கி போறவன் தான் சார் ஆம்பள.” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

மேலும், “பெண்களைக் கேலி செய்தல் பின்தொடர்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். பெண்களை மதிப்போம்” என்ற வார்த்தைகளுடன் “பெண்களை பின் தொடர்தல், கேலி செய்தல், அவர்கள் விருப்பமின்றி தகாத முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கையும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் விடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, அஜித் திரைப்படத்தைப் பயன்படுத்தி தேனி மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ள மீம் ஒன்றும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த மீமில், அம்மாவிடம் மகள், தன்னை யாரோ துரத்துவதாகக் கூற, அம்மா “உன் மொபைல்ல இருக்குற காவலன் SOS APP பட்டனை அழுத்து” என்று கூறுகிறார் உடனடியாக காவல்துறை அங்கு வருவதாக அந்த மீம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விஸ்வாசம் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ள இத்தகைய பதிவுகளுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon