மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஸ்லிம் சேதுபதி: இது ஒரு காதல் அட்டாக்!

ஸ்லிம் சேதுபதி: இது ஒரு காதல் அட்டாக்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படத்துக்குப் பிறகு, உடனடியாக பல திரைப்படங்களை எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால், சினிமா பக்கமே தலையைக் காட்டாமல் ஒதுங்கியே இருந்த விக்னேஷ் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் முக்கோணக் காதல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இதில் அப்படி என்ன புதிதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

விக்னேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி வேலை செய்திருந்ததை ரசிகர்கள் பார்த்துவிட்டனர். இப்போது மீண்டும் அதே கூட்டணி என்பதும், அதில் சமந்தா எந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதுமே இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. நானும் ரௌடி தான் திரைப்படம் எத்தனையோ விதத்தில் பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், பல வருடங்காளாக நயன்தாராவைப் பார்த்து வரும் ரசிகர்களுக்கே புதிதாய் தெரிவது போல, உடல் எடையை இறக்கி, அதற்கேற்ப உடை மற்றும் ஆபரணங்களை தேர்வு செய்து மீண்டும் ஒரு கனவுக் கன்னியைக் கொடுத்திருந்தார் விக்னேஷ். அதுபோலவே, இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் எடையை முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகமாக குறைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காகவே இந்தத் திரைப்படம் இவ்வளவு தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவருமே பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர்கள். விஜய் சேதுபதி நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் மற்ற ஷூட்டிங்கையெல்லாம் நிறுத்திவிட்டு, சில காலம் பயிற்சியெடுத்து உடல் எடையைக் குறைத்துவிட்டு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவேண்டும் என்பதாலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் அறிவிப்பு தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது ரஜினியின் 168ஆவது திரைப்படத்தில் நயன்தாராவும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் பிசியாக இருக்கிறார்கள். சமந்தா ஏற்கனவே இந்தப்படத்துக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஷூட்டிங்கையெல்லாம் முடித்துவிட்டு முழுவதுமாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்துக்கு தங்களை முழுவதுமாக அர்ப்பணிக்கப்போகின்றனர் என்கின்றனர் படக்குழுவினர்.

-சிவா

திங்கள், 17 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon