சுரேஷ் காமாட்சி உரை: த்ரிஷாவுக்கு திட்டா? சிம்புவுக்கு எச்சரிக்கையா?

entertainment

த்ரிஷா கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. நந்தா, ரிச்சர்ட் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார்.

வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று(பிப்ரவரி 22) சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் பாக்கியராஜ், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே. ராஜன், டி.சிவா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி த்ரிஷா கலந்துகொள்ளாதது பெரும் விவாதமாக மாறியது.

தயாரிப்பாளர் டி.சிவா உரையாற்றும் போது த்ரிஷா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேசும் போது, **“இந்தப் படத்திற்கு புரொமோஷன் பண்ண வேறு யாராலும் முடியாது. த்ரிஷாவை தவிர மற்றவர்கள் அனைவரும் அறிமுகமாகவும், புதுமுகமாகவும் இருப்பதால் ஏற்கனவே இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும். த்ரிஷாவுக்கு பெயரும் புகழும் இனிமேல் தேவை இல்லை என்று நினைக்கலாம். ஆனால் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் அந்த வாழ்க்கை தேவை. ஒருவேளை இன்று கதாநாயகி வரமுடியாததற்கு அவருடைய சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஆனால் அடுத்த வாரம் படம் ரிலீஸாகும் நிலையில் தொடர்ந்து நடைபெறும் புரொமோஷன்களில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைத் திருப்பி தர வேண்டி வரும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கையாக சொல்கிறேன். இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்”** என்று கடுமையாகக் கூறினார்.

அதேபோன்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, **“பொதுவாக திரைப்படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பிற புரொமோஷன் பணிகளில் படத்தில் நடித்தவர்கள் தான் வருவார்கள். ஆனால் இங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இயக்குநர், தயாரிப்பாளர் என நாங்கள் அனைவரும் நண்பர்களாக வந்திருக்கிறோம். இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்போதெல்லாம், படத்தின் புரொமோஷனுக்கு வரவில்லை என்றால், அவர் பெரிய நடிகர் என்ற ட்ரெண்ட் உருவாகியுள்ளது. உச்ச நட்சத்திரமான ரஜினி சாரே புரொமோஷனுக்கு வரும்போது இவங்க எல்லாம் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.**

**இவர்களை இந்த அளவிற்குக் கொண்டு போய் பெயர், புகழ் பெற்றுக்கொடுத்ததே பத்திரிகை நண்பர்களும், ரசிகர்களும் தான். அவர்களை சந்திப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? பணம் போட்டு படம் எடுக்கிறோம். எதற்காக உங்களைப் போன்ற ஒரு பிரபலான நடிகர்களைத் தேர்வு செய்கிறோம்? உங்களுக்கு என்று ரசிகர் கூட்டம் இருக்கிறது, உங்கள் பிரபலம் படத்திற்கு உதவும் என்று தான். முகம் தெரிந்த ஒரு நடிகர்கள் இருக்கும் போது அவர்களுக்கு ஒரு மைலேஜ் இருக்கும் என்று தான் அவர்களைப் படங்களுக்குத் தேர்வு செய்கிறோம். அப்படி இருக்கும் போது உங்களுக்குக் குறைந்த பட்ச பொறுப்பு இருக்க வேண்டாமா? எதனால் வர மறுக்கிறீர்கள்? எந்த காரணத்தால் ஊடக நண்பர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தான் பிரச்னை. தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உங்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறோமா? இல்லை வேறு விதமான டார்சர் ஏதாவது கொடுத்தார்களா? அப்படி இருந்தால் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்.**

**படங்களின் புரொமோஷனுக்கு நீங்கள் வரவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் தான். இது உங்கள் பொறுப்பு , அதனால் தான் உங்களை வைத்து படம் எடுக்கிறோம். இல்லை என்றால் ஒரு புதுமுகத்தை வைத்தே படம் எடுக்கலாமே. எதற்காக உங்களை மாதிரியானவர்களுக்கு நீங்கள் கேட்கும் சம்பளத்தைத் தந்து உங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்? நீங்கள் படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபடும்போது, பத்திரிகை நண்பர்கள் உங்களைப் பற்றிய செய்திகளை எழுதுவார்கள். உங்களை இத்தனை தூரம் உயர்த்தியவர்கள் மேலும் உயர்த்துவார்கள். நீங்களே வரவில்லை என்றால் எப்படி?”** என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பல தயாரிப்பாளர்கள் முன்னணி நட்சத்திரங்களால் இத்தகைய பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும் பலரும் பொதுமேடைகளில் இதனைக் கூற முற்படுவது இல்லை. பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்துத் திரைப்படம் எடுக்கும் போது எப்படியாவது அவர்களை புரொமோஷன் பணிகளில் ஈடுபட வைத்து விடுவர். ஆனால் சுரேஷ் காமாட்சி தற்போது தயாரித்துவரும் ‘மாநாடு’ திரைப்படம் முழுக்க முழுக்க முன்னணி நட்சத்திரங்கள் வைத்து எடுக்கப்படுகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்திற்குப் பிறகு தான் ஒப்பந்தமான பல திரைப்படங்களில் இருந்தும் சிம்பு விலகிக் கொண்டார். சரியாகப் படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுடன் பிரச்னை என்று அதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டது. சிம்புவை வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் எடுக்கப் போகிறார் என்று கூறியதையே பெரும் சாகசம் என்பது போல பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் த்ரிஷா குறித்து சுரேஷ் காமாட்சி பேசியிருப்பது, த்ரிஷா மீதான கோபமா இல்லை சிம்புவுக்கான எச்சரிக்கையா என்பதாகப் பலரும் கேட்டு வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *