மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

‘இயன்றதை செய்வோம்’: பார்த்திபன் ஐடியா!

‘இயன்றதை செய்வோம்’: பார்த்திபன் ஐடியா!

கொரோனா வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க தமிழக மக்களும் தீவிர போராட்டம் நடத்திவரும் நிலையில், அரசுக்கு உதவி செய்யும் விதமான யோசனை ஒன்றை நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸால் தமிழக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் விழிப்புணர்வு வீடியோவாக மட்டுமல்லாமல் அரசுக்கு தனது யோசனையைக் கூறி அதனை கோரிக்கையாகவும் அவர் முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தை விட கொடுமையானது. இதில் இருந்து மக்களை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் மாண்புமிகு பிரதமர், இடையறாது பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழக முதல்வர், அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள், அரசுப்பணியாளர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி.

இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எந்த நோய் வந்தாலும் மருந்து கொடுத்தால் அதை சரியாக்கிடலாம் என்பதை மீறி, இந்த கொரோனா வைரசின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்னவென்றால், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க போதிய இட வசதி இல்லை என்பதுதான். இது துயரமானது. இத்தாலி போன்ற வசதியான நாடுகளில் கூட, செயல்படுத்த முடியலை எனும் போது, இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் அதை செயல்படுத்துவது மிக மிகக் கடினமான விஷயம். இருந்தும் அரசு இது சம்மந்தமாக தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கிறது.

இது குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதால் எனக்குத் தோன்றிய ஒரு சின்ன யோசனை. போதிய மருத்துவமனை வசதி இல்லாத நிலையில், இந்த அவசர நிலையை சரி செய்யும் விதத்தில், சில அவசர மருத்துவமனைகள், அதாவது மருத்துவ வசதியை கொடுப்பதற்கான சின்ன சின்ன இடங்களை நம்மால் உருவாக்க முடியுமா? எம்.எல்.ஏ விடுதி, அரசு அலுவலகங்கள் போன்றவை இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஐசியூ மாதிரியான ஒரு வார்டை உருவாக்க முடியாதே தவிர, தனிமைப்படுத்தும் அளவுக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா?

தற்காலிக ஏற்பாடாக அந்தந்த சாலை முனைகளில், சின்ன சின்ன இடங்களில், 24 மணி நேர சேவை செய்யும் மருத்துவமனைகளை ஏற்படுத்த முடியுமா? இப்போது நான் நந்தனத்தில் இருக்கிறேன். கே.கே நகரில் எனக்கு மூன்று ஃபிளாட்கள் இருக்கின்றன. அதனைத் தந்து உதவ நான் தயார். அதே போன்று இரு வீடுகள் இருப்பவர்கள் ஒரு வீட்டில் தாங்கள் தங்கி விட்டு, மற்றொரு வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்தக் கொடுக்கலாம்.

இதை ஒரு தற்காலிக ஏற்பாடாக செய்யலாம். இதை செய்வது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு சின்ன யோசனை, அதை உங்களிடம் சொல்லாம் என்று நினைக்கிறேன். உங்கள் ஆலோசனைகளில் இதையும் வைத்துக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

அத்துடன் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வரும் ஊடக நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்தார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 24 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon