மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

நெருப்பா? நீரா? RRR டீமின் மகிழ்ச்சி மருந்து!

நெருப்பா? நீரா? RRR டீமின் மகிழ்ச்சி மருந்து!

இந்திய திரை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த RRR திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக ராஜமெளலி இயக்கிவரும் திரைப்படம் RRR. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என்று ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. மிக நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தத் திரைப்படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் இன்று(மார்ச் 25) மதியம் 12 மணிக்கு வெளியாகியுள்ளது.

கொரோனாவால் மனம் வருந்தி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக இதனை வெளியிடுவதாக ராஜமெளலி அறிவித்திருந்தார். அவர் குறிப்பிட்டது போன்றே மனமுடைந்த ரசிகர்களுக்கான மகிழ்ச்சி மருந்தாக இந்த டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் அமைந்துள்ளது.

அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட் மற்றும் இசையுடன் கூடிய இந்தப்போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ராம் சரண் நெருப்பு சூழ்ந்தும், ஜூனியர் என்.டி.ஆர் நீரின் பின்புலத்துடன் வருவதாகவும் இருவரும் கை கோர்ப்பதாகவும் அந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. நெருப்பை குறிப்பிடும் ‘ஆர்’ இரத்தம் என்றும், நீரைக் குறிப்பிடும் ‘ஆர்’ ரெளத்திரம் எனவும், இரண்டும் இணையும் போது ‘ரணம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். RRR என்பதாக ரத்தம்-ரெளத்திரம்-ரணம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி என பிரபல திரை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இந்தத் திரைப்படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon