மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

சுகாதாரத் துறை அமைச்சருக்கு சுத்தமான வாழ்த்து!

சுகாதாரத் துறை அமைச்சருக்கு சுத்தமான வாழ்த்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் விதமாக சிறப்பாக செயலாற்றிவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு உதவும் விதமான யோசனை ஒன்றைக் குறிப்பிட்டு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நேற்று(மார்ச் 24) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். போதிய மருத்துவமனைகள் நமது மாநிலத்தில் இல்லாத காரணத்தால் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்குத் தனது வீடுகளைத் தந்து உதவ தயார் என்றும் அவர் அதில் பேசி இருந்தார். இது தொடர்பாக ‘இயன்றதை செய்வோம்’: பார்த்திபன் ஐடியா! என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்துள்ளார். பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக் கூறுவதற்குப் பதிலாக சானிட்டைசர் கேனைக் கொடுத்து வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், ‘தனித்திரு, விழிப்புணர்ச்சியோடு இரு, ஆரோக்கியத்துடன் இரு’ என்று குறிப்பிட்டு, “சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.

இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன். அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.” என்று தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon