மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

‘மீம்சு பசங்க சூப்பர்’: நடிகர் விவேக் பாராட்டு!

‘மீம்சு பசங்க சூப்பர்’: நடிகர் விவேக் பாராட்டு!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக நடிகர் விவேக் நடித்த காட்சியைப் பயன்படுத்தி மீம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த விவேக், அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

விவேக் நடித்த பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் அனைத்தும் பிரபலமானவை. அவற்றில் மக்களை அதிகம் ரசிக்க வைத்த ஒரு காட்சியில் இடம்பெறும் வசனத்தை சற்று மாற்றி அமைத்து மீம் வீடியோ ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் விவேக் தனது மனசாட்சியுடன் பேசுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். “ச்சே, சும்மா இருக்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. எல்லாரும் போன்ல பேசுறாங்க. நா என்கிட்டயே பேசப்போறேன்.” என்று கூறிக்கொண்டே தனது ஃபோட்டோ ஒன்றைப் பார்த்து, “ஏய் நீ ரொம்ப அழகா இருக்க.. வீட்ல இருக்க செம்ம காண்டா இருக்கு. நா வேண்ணா வெளிய போயி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரட்டுமா?” என்று கேட்கிறார். அதற்கு அவரது மனசாட்சி, “ஆமா எதுக்குடா லாக்டவுன்” என்று மறு கேள்வி கேட்பதாகவும், அதற்கு “அதுவா, கொரோனா பரவாம இருக்க. போகட்டுமா?” என்று இவர் பதில் சொல்வதாகவும் மாற்றி அமைத்துள்ளனர்.

அதற்கு “போகாத.. போகாத..” என மனசாட்சி சொல்கிறது. “அப்டிதான்டா போவேன்.. போனா என்ன ஆகும்.” என்று விவேக் கேட்பதற்கு. அவரது புகைப்படத்திற்கு மாலை போட்டு, படையல் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைப்பார்த்த அவர், “ஆஹா... கொரோனா போனதுக்கு அப்புறமே வெளிய போய்க்கலாம்” என்று கூறிக் கொண்டே படுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ சிரிக்க மட்டுமின்றி அனைவரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று எத்தனை ஆபத்தானது என்பதை நகைச்சுவையுடன் விளக்கிய மீம் கிரியேட்டர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விவேக், “மீம்சு பசங்க சூப்பர்! கிட்ட தட்ட என் குரல் போலவே இருக்கு!!!! அடப் பாவிகளா” என்று பாராட்டியுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon