மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

கொரோனாவால் முன்னாள் மனைவியுடன் மீண்டும் இணைந்த ஹிரித்திக் ரோஷன்

கொரோனாவால் முன்னாள் மனைவியுடன் மீண்டும் இணைந்த ஹிரித்திக் ரோஷன்

கொரோனா வைரசால் இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷன் விவாகரத்து பெற்ற தனது மனைவியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கமும், அதன் விளைவுகளும் மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி வந்தாலும் மக்களிடையே சில நல்ல மாற்றங்களும் தென்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்த சூழலில் தனது மகன்களுக்காக, நடிகர் ஹிரித்திக் ரோஷன் விவாகரத்துப் பெற்றுக்கொண்ட தனது மனைவி சூசனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தகவல்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், தொழிலதிபரும், வடிவமைப்பாளருமான சூசன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 13 வருடகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். அந்த நேரத்தில் ஹிரித்திக் ரோஷன், சூசனுக்கு ஜீவானம்சமாக 380 கோடி ரூபாய் கொடுத்திருந்தது பேசு பொருளாக மாறியது. எனினும் தங்கள் மகன்களான ரிஹான் மற்றும் ரிதானுக்காக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதையும், மகன்களுடன் நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவால் 21 நாட்கள் வெளியே செல்ல முடியாத தனது மகன்களுக்காக சூசன், தனது முன்னாள் கணவருடன் மீண்டும் இணைந்துள்ளார். ஹிரித்திக்கின் வீட்டிற்கு வந்து தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஹிரித்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்தப்பதிவில், “நாடே முடக்கப்பட்டிருக்கும் போது ஒரு தந்தையாக என் மகன்களைப் பிரிந்து இருப்பது என்னால் கற்பனை செய்து கொள்ள இயலாத ஒன்று, சில மாதங்களாக தனிமைப்படுத்துதலும், பல வார கால ஊரடங்கு உத்தரவும் நடைமுறையில் இருந்தாலும் உலகமே ஒன்றாக இணைந்திருப்பதை நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது.

உலகமே மனித நேயத்தால் ஒன்றிணைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கவனிக்க சம உரிமை எடுத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. இந்தப் புகைப்படத்தில் எனது அன்பிற்குரிய முன்னாள் மனைவி சூசன் தானாக முன் வந்து எனது வீட்டிற்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்திருப்பதை நீங்கள் காண முடிகிறது. இந்த சூழலில் எங்கள் குழந்தைகள் பெற்றோரான எங்கள் இருவரிடம் இருந்தும் விலகிவிடாமல் இருக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார். எனது சூழலைப் புரிந்துகொண்டு எனக்காக இங்கு வருகை தந்த சூசனுக்கு எனது நன்றிகள். நமது குழந்தைகள் நாம் அவர்களுக்காக உருவாக்கிய கதையைக் குறித்து எதிர்காலத்தில் பேசுவார்கள்” என்று உணர்ச்சிப் பூர்வமாக அவர் எழுதியுள்ளார்.

இந்தப்பதிவு ரசிகர்களை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஹிரித்திக்-சூசன் தம்பதியரின் புரிதல் மிக்க முடிவுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon