மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

மீண்டும் கொரோனா உறுதி: கனிகா கபூர் மீது வழக்குப்பதிவு!

மீண்டும் கொரோனா உறுதி: கனிகா கபூர் மீது வழக்குப்பதிவு!

பிரபல பாடகி கனிகா கபூருக்கு நான்காவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் பாடகி கனிகா கபூர், சன்னி லியோன் நடித்திருந்த ‘பேபி டால்’ பாடலைப் பாடியதன் மூலம் உலக அரங்கில் பிரபலமடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த சூழலில் மார்ச் 9ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். அத்துடன் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததையும் மறைத்து வைத்து லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 260 பேரை போலீஸார் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கனிகாவுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து லக்னோவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிகா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் குற்றம் சாட்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில் சூழலில் அறிகுறிகள் இருந்தும் அலட்சியமாக நடந்துகொண்ட பாடகி கனிகாவின் மீது சரோஜினி நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188, 269, மற்றும் 270 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான்காவாது முறையாகவும் கனிகாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐ.ஏ.என்.எஸ்(Indo-Asian News Service) செய்தி நிறுவனத்திற்கு அவரது உறவினர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த நபர் கூறுகையில், ‘கனிகாவின் பரிசோதனை முடிவுகள் எங்களுக்கு மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது. அவர் சிகிச்சைக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. இந்த ஊரடங்கு நேரத்தில் எங்களால் அவரைச் சென்று பார்க்கவோ, உயர்தர சிகிச்சை அளிக்கவோ வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தனது நிலைமையை மறைத்து வைத்து அலட்சியமாக நடந்துகொண்ட பாடகி கனிகாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 29 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon