‘மதவெறி பிடிச்சவங்களே’: சாந்தனு ட்விட்டரில் காட்டம்!

entertainment

ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகளை எரியவிட வேண்டும் என்பதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். எனினும் நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளாமல் பலரும் சாலைகளில் சாதாரணமாக நடக்கின்றனர்.

கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் விதமாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் பல்வேறு பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று(மார்ச் 3) காலை 9 மணி அளவில் மக்களிடம் வீடியோ பதிவின் மூலம் உரையாற்றினார். அவர் பேசுகையில் வரும் (ஞாயிற்றுக்கிழமை) ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல் ஃபோன் லைட் என ஏதாவது ஒன்றை ஒளிர விட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ட்விட்டர் தளத்திலும், பிற சமூக வலைதளங்களிலும் பிரதமரின் அறிவிப்பைக் குறிப்பிட்டு பல மீம்கள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பை குறிப்பிட்டு நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் ‘சூரியன்’ திரைப்படத்தில் இடம்பெறும் கவுண்டமணியின் நடன காட்சி வீடியோவைப் பகிர்ந்து “ஏற்கனவே இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம். இது போன்ற எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவிற்கு பிரதமரின் ஆதரவாளர்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து நடிகர் சாந்தனு, “அதிக அளவில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்த ஒரு பதிவு தான் அது. ஆனால், அனைவரும் முஸ்லீம்கள் ஒன்று கூடுவதைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள். நான் ஏன் பாஜகவை குற்றம் சாட்ட வேண்டும்? நான் பாஜகவை பற்றி பேசவில்லை. மதவெறி பிடித்தவர்களே! எல்லா நாளும் ரோட்டில் எல்லா மதமும் கும்பலாக சுத்துது. ஏன் ஒரு மதத்தை மட்டும் குற்றம் சொல்லவேண்டும்” என்று கோபமாகப் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவிற்கும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றும் கோரிக்கை நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது.நமது நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை அது வெளியே கொண்டுவரும். ஒரு கோரிக்கை தான். போன முறை செய்தது போன்று கூட்டமாகக் கூடி முட்டாள்தனமாக எதையும் செய்ய வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *