மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கொரோனா நிவாரணம்: நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி!

கொரோனா நிவாரணம்: நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி!

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவும் விதமாக நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலக மக்கள் அனைவரது வாழ்க்கையிலும் வேகத்தடையாக மாறியுள்ள கொரோனாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இன்றி, பொருளாதாரம் தடைபட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் நமது தமிழகத்திலும் பசியால் வாடி வருகின்றனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை பட்டினி மரணங்கள் தோற்கடித்துவிடுமா என்ற அச்சமும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான மருத்துவப் போராட்டத்திற்கும், மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வேண்டியுள்ளது.

பெரும் தொழிலதிபர்கள், முன்னணி திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் அதற்கு ஏற்ப நிதியுதவிகளையும் அளித்து வருகின்றனர். பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரைப் பலரும் பாராட்டி வந்தனர். அத்துடன் பல்வேறு தெலுங்கு, இந்தி நடிகர்களும் பெரும் தொகைகளை நிவாரண நிதியாக அளித்து வருகின்றனர். தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்க முன்வராதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனினும் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டதால் வேலையும், பணமும் இன்றித் தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பண உதவிகளும், உணவுப் பொருட்களையும் வழங்கி வந்தனர்.

மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு தமிழின் முன்னணி நடிகர்கள் நிதியுதவி வழங்க முன் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் கொரோனா நிவாரணத்துக்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் அவர் வழங்கியுள்ளார். மேலும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ஃபெப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில் கொரோனாவின் தீவிரம் முன்பை விடவும் வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதின்மூன்று லட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில் மரண எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவிலும் 4, 908 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் அஜித்துக்குப் பலரும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 7 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon