h2020: டாப் ஸ்டார்களின் படங்கள் என்ன ஆகும்?

entertainment

தமிழ் சினிமா ரசிகர்கள் 2020ஆம் ஆண்டை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். தமிழ் சினிமாவின் பல முக்கியமான படங்கள் இந்த வருடத்தில்தான் ரிலீஸாக தயாராகி வந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழ் சினிமா இயங்காமல் இருக்கும் இந்த பாதிப்பினால், 2020ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த படங்களின் நிலை இப்போது என்ன என்பதைப் பார்ப்போம்.

**ரஜினியின் அண்ணாத்த**

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி, மீனா, குஷ்பு உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. ஆந்திராவிலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் முழு வேகமாக நடைபெற்றிருந்தாலும், பிப்ரவரி மாத இறுதியின்போது 60 சதவிகிதப் படப்பிடிப்பை மட்டுமே படக்குழுவினர் முடித்திருக்கின்றனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில்தான் அனைத்து ஆர்ட்டிஸ்ட்களின் கால்ஷீட்டும் மொத்தமாக வாங்கப்பட்டிருந்தது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால் திரைத்துறை முடங்கியிருக்கும் நேரத்தில் நின்றுபோன படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி படத்தை ரிலீஸ் செய்தாலும், முன்னரே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்கின்றனர் படத்தில் இடம்பெற்றவர்கள். மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து உருவாக்கப்படும் அண்ணாத்த சாதாரண நாட்களில் ரிலீஸாவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், அண்ணாத்த டீம் 2020 தீபாவளியை டார்கெட் செய்து ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.

**சூர்யாவின் அருவா**

அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்ற தகவலைக் கேட்கும் ஒவ்வொரு சினிமா ரசிகரின் மனத்திலும் எழும் கேள்வி, ‘அப்ப அருவா நிலைமை என்ன?’ என்பதாகத்தான் இருக்கும். படத்தின் டைட்டிலை அறிவிப்பதற்கு முன்பாகவே 2020 தீபாவளி ரிலீஸ் என்ற தகவலை வெளியிட்டது சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள அருவா டீம். எனவே, தீபாவளியின்போது ரஜினியின் படத்துடன், சூர்யா படம் மோதுமா என்ற கேள்வியைவிட, அதற்குள் அருவா படம் தயாராகிவிடுமா என்ற கேள்வியுடன் அருவா டீமை அணுகியபோது, ‘அதெல்லாம் பண்ணிடலாம்’ என மிகவும் அசால்ட்டாகவே பதில் கூறினர். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற முடிவையே இன்னும் எடுக்காத நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடலாமா என்று கேட்டபோது “ஹரி சார் டைரக்‌ஷன்ல எல்லாமே சாத்தியம்தான்” என்கின்றனர். “படம் எப்படி வேகமாகச் செல்லுமோ, அதேபோல ஷூட்டிங்கும் வேகமாக தான் நடக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் எல்லா வேலையும் செய்வார்கள். ஒரு காட்சிக்கான ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு டீம் அடுத்த காட்சிக்குத் தயாராவார்கள். மொத்தமாகவே மூன்று மாதங்கள்தான் எங்கள் கணக்கில் இருக்கிறது” என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்கிறது அருவா டீம்.

**கமலின் இந்தியன் 2**

தமிழ் சினிமாவையே அசைத்துப் பார்த்த விபத்துக்குப் பிறகு இந்தியன் 2 டீமை ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவர நடைபெற்ற எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மீட்டிங்கில் கோடைக்காலம் முடியட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பிறகு எப்படி என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றிய எவ்வித உறுதியையும் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட இருவரும் லைகா நிறுவனத்துக்குக் கொடுக்கவில்லை என்கின்றனர். எனவே, 2020ஆம் வருடத்தை இந்தியன் 2 சுலபமாகவே கடந்துவிடும் என்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கமல்ஹாசனின் காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட்டால்கூட படத்தை 2021இல் ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறது இந்தியன் 2 டீம்.

**சிம்புவின் மாநாடு**

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடையும் கதை கமல்ஹாசனுக்கு மட்டும் சொந்தமானதல்ல. சிம்புவும் அந்த வரிசையில்தான் நிற்கிறார். படத்தின் 80 சதவிகிதப் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, கால்ஷீட் பிரச்சினையால் மாநாடு முடங்குகிறது என்று தகவல்கள் வெளியான நேரத்தில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என பாய்ந்து வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் குதித்தார் சிலம்பரசன். ஆனால், கொரோனா லாக்-டவுண் ஸ்டார்ட் ஆகிவிட்டதாகக் கூறி அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஷூட்டிங்கும் நின்றிருக்கிறது. இதுவரை நடித்துக்கொண்டிருந்த வேகத்திலேயே நடித்தால் சிம்புவின் மாநாடு 2020இல் தியேட்டரில் மேடையேறும்.

**ஆர்யாவின் சல்பேட்டா**

இயக்குநர் ரஞ்சித்துடன் ஆர்யா இணைந்திருக்கும் படம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. நார்த் மெட்ராஸைச் சேர்ந்த பாக்சர் ஸ்டோரி என்பதும், அதை இயக்குவது ரஞ்சித் என்பதும் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். இந்தப் படத்தையும் 2020இன் கடைசி மூன்று மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்டாலும், சல்பேட்டா திரைப்படம் சில பொருளாதார சிக்கலில் மாட்டியிருப்பதாகவும், அதனாலேயே ஷூட்டிங் கொஞ்சம் நிதானமாக நடைபெறுவதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

**சிவகார்த்தியின் டாக்டர்**

டாக்டர் திரைப்படம், சிவகார்த்தியின் வாழ்க்கையிலேயே முக்கியமான படம் என்ற ஓப்பனிங்குடன்தான் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 சதவிகிதப் படத்தை இதுவரை எடுத்து முடித்திருக்கிறார்கள். படத்தின் இன்டர்வல் பிளாக் மற்றும் க்ளைமாக்ஸ் போர்ஷன் படமாக்கப்படவில்லை. இவற்றைப் படமாக்கி முடித்து சரியாக தீபாவளி நேரத்திலேயே ரிலீஸுக்குக் கொண்டுவர முடியும் என்கிறது டாக்டர் டீம். படத்தைத் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் ஆகிய இரு நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கும் பணம் சொந்தப் பணம் இல்லையென்பதால், முடிந்த அளவுக்குச் சீக்கிரமாகவே படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்வார்கள் என்கின்றனர்.

**அஜித்தின் வலிமை**

வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தின் 70 சதவிகிதப் படப்பிடிப்புதான் முடிந்திருக்கிறது. படத்தின் முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகள் மீதியிருக்கின்றன. அவற்றை எடுத்து முடிப்பதற்குள்ளாக ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் படப்பிடிப்பு நின்றது. அதை சரிசெய்து ஷூட்டிங்கை எடுப்பதற்குள் கொரோனா வந்துவிட்டது. அஜித்தின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடத்துவதே இல்லை என சினிமா தொழிலாளர் சங்கங்களின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. கதைக்குத் தேவையாக இல்லாமல், அஜித்தின் திரைப்படம் என்றாலே அது வெளியூர் அல்லது வெளிநாடுதான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதையும், இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அஜித்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதைப்பற்றி யோசித்த அஜித், தேவை இருந்தால் மட்டுமே வெளிநாடு ஷூட்டிங் செல்வோம். மற்ற நேரங்களில் தமிழ்நாட்டிலேயே ஷூட்டிங் நடைபெறும் என உறுதி கொடுத்தார். எனவே, அஜித் கொடுத்த வாக்குக்கு ஏற்ப ஷூட்டிங் திட்டங்களை மாற்றியமைக்க முயன்றது வலிமை டீம். ஆனால், அதற்குள்ளாக கொரோனா வந்துவிட்டதால் மீதியிருக்கும் 30 சதவிகிதப் படம் இன்னும் மீதியிருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கப்படாமல் அல்லது பாதியில் நிற்கும் படங்களென இத்தனை முக்கியமான அதிக பட்ஜெட் படங்கள் காத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் தனுஷின் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகக் காத்திருக்கின்றன. தயார் நிலையில் இருக்கும் மூன்று படங்களுக்குமே மிகப்பெரிய விடுமுறைக் கால ஓப்பனிங் தேவைப்படுகிறது. ஆனால், இன்னும் ஷூட்டிங்கில் இருக்கும் படங்கள் அந்த விடுமுறைக் காலங்களை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கின்றன. எனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல, ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாவதற்கான வாய்ப்பு 2020ஆம் ஆண்டுக்கு அதிகமாக இருக்கிறது. அதே நேரம் படம் ரிலீஸானால் தியேட்டருக்கு மக்கள் வருவார்களா, தியேட்டருக்கு வர மக்களை அரசாங்கம் அனுமதிக்குமா என்ற கேள்வியும் இங்கு விவாதிக்கப்பட வேண்டியது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களை ஒரே இடத்தில் நிறுத்தி, ஒரே காற்றை மீண்டும் மீண்டும் கடந்து செல்லக்கூடிய சூழலை உருவாக்குவது தியேட்டர்கள்தான். கொரோனாவின் தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தியேட்டர்கள்தான் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். எனவே, அவ்வளவு எளிதில் தியேட்டர்களுக்கான அனுமதி என்பது வாய்ப்பில்லாத ஒன்று. அப்படியே அனுமதி அளிக்கப்படும்பட்சத்தில், அதற்கான கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். எனவே, இதுவரையில் இருந்த தியேட்டர் அனுபவம் என்பது முற்றிலும் மாற்றமடைந்து ஒரு புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கக்கூடிய சூழல் இங்கு உருவாகப்போகிறது என்பது மட்டும் உண்மை.

**-சிவா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *