சித்தார்த் அபிமன்யுவாக அஜித்? ‘தனி ஒருவன்’ ரகசியம்!

entertainment

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் தான் தனது முதல் தேர்வு என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. ஹிப் ஹாப் ஆதி இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள், தீம் மியூஸிக் என அனைத்துமே ரசிகர்களின் மனம் கவர்ந்த அம்சமாக இருந்தது. பரபரப்பான திரைக்கதை, யூகிக்க முடியாத டிவிஸ்டுகள் என தியேட்டரில் எல்லோரையும் கட்டிப் போட்ட இப்படம் தமிழ் ரசிகர்கள் என்றென்றும் கொண்டாடும் வகையில் ஒன்றை அளித்துச் சென்றிருக்கிறது. அது, படத்தில் இடம்பெற்ற சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம். வில்லனாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள், தனித்துவமான பார்வை, அதில் கிடைத்த உத்வேகம் ஆகியவை ரசிகர்களை மீண்டும் மீண்டும் இப்படத்தை பார்க்கவைத்தது. கதை, திரைக்கதை, நடிகர்கள் என அனைத்தையும் கடந்து படத்தின் வெற்றிக்கு முதல் காரணமானது இக்கதாபாத்திரம்.

அரவிந்த் சாமி இக்கதாபாத்திரத்திற்கேற்ற மாஸ் மற்றும் கிளாஸ் அம்சத்தோடு அவரது டிரேட் மார்க் கம்பீரக் குரலோடு அசத்தியிருப்பார். அதே வேளையில், படம் வெளியான போதே இப்படத்தில் வந்த வில்லன் கதாபாத்திரம் அஜித்துக்கானது, சித்தார்த் அபிமன்யுவாக அஜித் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என கூறாதவர்களும் இல்லை. பெரும்பாலும் அஜித் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் இப்படிப்பட்டவையே. படங்களில், எத்தனை பேருடன் இருந்தாலும் அஜித் தனித்திருக்கவே விரும்புவார், அவருக்கென தனி வழியிருக்கும், யாரையும் நம்ப மாட்டார், அவரது ஒவ்வொரு நகர்வையும் அவரே தீர்மானிப்பவராக இருப்பார். அமர்க்களம், அட்டகாசம், பில்லா, பில்லா 2, மங்காத்தா என பல படங்களில் அஜித் செய்த கதாபாத்திரங்களின் சாயலை இந்தக் கதாபாத்திரத்திலும் பார்க்க முடியும்.

இந்நிலையில், சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்திற்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குநர் மோகன் ராஜாவிற்கும் அஜித் தான் முதல் தேர்வு என்ற ஆச்சரியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு மோகன் ராஜா அளித்த பேட்டியில், “அஜித் தான் எனது முதல் தேர்வாக இருந்தது. நிச்சயம் அவர் பொருத்தமாக இருப்பார் என உதவி இயக்குநர்களும் டிஸ்கஷன் நேரத்தில் ஆமோதித்தனர். ஆனால், மேற்கொண்டு என்னால் செயல்படுத்த முடியவில்லை. அதே சமயம் ராணா டகுபாய், கிச்சா சுதீப் ஆகியோரும் மனதிற்கு வந்தார்கள்” எனக் கூறினார்.

பின்னர் எப்படி அரவிந்த் சாமி தேர்வானார்? அந்த சுவாரஸ்யக் கதையை மோகன் ராஜாவே பலமுறை கூறியிருக்கிறார். தனி ஒருவன் திரைக்கதை பணிகள் சென்று கொண்டிருக்கும் போது, அவரது இணை இயக்குநர்களுள் ஒருவர் அரவிந்த் சாமியிடம் வேறொரு கதைக்காக பேசியிருக்கிறார். இந்தத் தகவலை சம்பந்தப்பட்டவர் இயக்குநரிடம் தெரிவிக்க, உடனடியாக சித்தார்த் கதாபாத்திரத்தோடு அரவிந்த் சாமியை பொருத்திப் பார்த்திருக்கிறார். அதன் பின்னர் அரவிந்த் சாமியை தவிர்த்து வேறு யாரும் தன் மனதிற்கு வரவில்லை, அவ்வளவு சிறப்பாக பொருந்தினார் அவர் என மோகன் ராஜா தெரிவித்தார்.

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *