மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

ரஜினியிடம் ஜப்பான் மயங்கிய ரகசியம்: ரவிக்குமார்

ரஜினியிடம் ஜப்பான் மயங்கிய ரகசியம்: ரவிக்குமார்

மின்னம்பலம்

ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமல்லாது ஜப்பானிலும் ரசிகர்கள் பெருமளவில் இருப்பதன் பின்னணி குறித்தும், அதற்கு முக்கிய காரணமான முத்து படம் குறித்தும் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

1995ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் முத்து. பாட்ஷா படத்திற்கு பின் அதே போன்ற வெற்றியை எதிர்பார்த்த ரஜினிக்கு, கே.எஸ். ரவிக்குமார் அளித்த பிளாக்பஸ்டர் ஹிட் இந்தப்படம். மீனா, சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு, ரகுவரன், வடிவுக்கரசி, ஜெயபாரதி உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருந்தனர். கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஆல்டைம் ஹிட் பாடல்களும் இப்படத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், இப்படம் ஜப்பானிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாகவும் இது மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்தது எனக்கூறலாம்.

இப்படம் ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர்களை உருவாக்கியது. தமிழ் நாட்டில் எப்படி ரஜினியை ரசிப்பார்களோ அதே போலவே அவர்களும் ரசிப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது, சென்னைக்கு வந்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நேரலையில் நடந்த கே.எஸ்.ரவிக்குமார் - ஆரவ் உரையாடலில், முத்து படம் குறித்து ஆரவ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முத்து பட இயக்குநர், "4 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஜப்பான் போயிருந்தேன். அப்போது கூட 'இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரு' என்று கேட்டார்கள். 'முத்து' படத்தைப் பார்த்துவிட்டு, அது அவர்கள் ஊரின் படம் போல் உள்ளது என்றார்கள். எங்கள் ஹீரோ மாதிரி ஆகிட்டார் ரஜினி சார் என்று சொன்னார்கள். ஜப்பானில் சென்டிமெண்ட் அதிகம். அதில் ரஜினி ராஜாவாக வரும் கதாபாத்திரத்தை ரொம்பவே வியந்து பார்த்தார்கள். அப்புறம் ரஜினி சாருடைய ஸ்டைல் எல்லாமே அங்குள்ள மக்களைக் கவர்ந்தது" என கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

-முகேஷ் சுப்ரமணியம்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon