மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

OTT ரிலீஸ் ஏன்? ஜோதிகா விளக்கம்!

OTT ரிலீஸ் ஏன்? ஜோதிகா விளக்கம்!

மின்னம்பலம்

பெண் மையப்படுத்தப்பட்ட படங்களுக்கு பெருமளவிலான திரையரங்க பார்வையாளர்கள் இல்லை என பொன்மகள் வந்தாள் படத்திற்காக OTT தளத்தை தேர்வு செய்ததன் பின்னணியைக் கூறியுள்ளார் ஜோதிகா.

ரசிகர்களால் 'ஜோ' என அன்போடு அழைக்கப்படும் ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின் நடித்த படம் '36 வயதினிலே'. இப்படத்தைத் தொடர்ந்து, ஜோதிகா வரிசையாக பெண்களை மையப்படுத்திய கதை, சமூக பிரச்சனைகளை பேசும் படம் என கவனமாக களங்களை தேர்ந்தெடுத்து தனது 'கம் பேக்'-ஐ மிகச்சரியாக அர்த்தப்படுத்தி வருகிறார்.

அண்மையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஜோதிகா, அமேசானில் வெளியாகவிருக்கும் தனது பொன்மகள் வந்தாள், OTT தளம் குறித்த பார்வை, சினிமா குறித்த தனது புரிதல் என தன் சமகால அனுபவங்களை பகிர்ந்துள்ளார் இவர்.

"இந்த ஆண்டு எனக்கு 41 வயதாகிவிடும். இப்போது நான் ஒரு ஹீரோவை போல உணர்கிறேன் அல்லது நான் ஒரு 41 வயது ஹீரோ” என்று புன்னகைத்தபடியே பேசத்துவங்கிய ஜோதிகா, முன்னணி நட்சத்திரங்கள் நடித்து OTT மேடையில் நேரடியாக வெளியிட திட்டமிடப்பட்ட முதல் தமிழ் படமாக அவரது பொன்மகள் வந்தாள் இருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

OTT ரிலீஸ் குறித்து பேசிய அவர்,“பெண் மையப்படுத்தப்பட்ட படங்களுக்கு பெருமளவிலான திரையரங்க பார்வையாளர்கள் இல்லை . இந்த காலங்களில் அந்த இடத்தை எங்களுக்கு வழங்க OTT தளங்கள் உதவுகின்றன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் வழியாக, 200 பிரதேசங்கள் /நாடுகளில் உள்ள மக்கள் பெண் மையப்படுத்தப்பட்ட படங்களை பார்க்க முடியும். எனவே, இது வெளிப்படையாக எங்களுக்கு ஒரு பெரிய இடத்தை அளிக்கிறது, இல்லையா?” என்கிறார் ஜோதிகா.

தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து பேசிய ஜோதிகா, "என்னைச் சுற்றி நடக்கும் சிக்கல்களைப் பற்றி பேசும் படங்களை நான் தேர்வு செய்கிறேன். மக்கள் எப்போதும் சினிமாவால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே நான் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். அதனாலேயே இத்தகைய திரைக்கதைகளை தேர்வு செய்கிறேன். பொன்மகள் வந்தாள் போன்ற ஒரு படம், என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு சிக்கலைக் கையாளுகிறது. பெண்களை வலுவானவர்களாகவும், கண்ணியமான முறையில் சித்தரிக்கப்படுகிற படங்களையும் நான் தேர்வு செய்ய விரும்புகிறேன்.

பெண்கள் புத்திசாலிகள், மல்டி டாஸ்கிங் திறன் கொண்டவர்கள். எனவே, நான் ஒரு ஸ்கிரிப்டில் புத்திசாலித்தனம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேடுகிறேன். இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கும் நான் பொறுப்பாக இருக்க வேண்டும். நாங்கள் டிவியை 'ஆன்' செய்யும் போது, அவர்கள் என்ன பார்க்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நான் காண்கிறேன். நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம், வரும் மே 29ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை பகிர்ந்த வெற்றிமாறன், 'நீதியை நோக்கிய பயணம்' என இப்படத்தை குறிப்பிட்டுள்ளார்.

-முகேஷ் சுப்ரமணியம்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon