மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

குறைவான சம்பளத்திலும் தள்ளுபடி: நாசரின் நல்லுள்ளம்!

குறைவான சம்பளத்திலும் தள்ளுபடி: நாசரின் நல்லுள்ளம்!

மின்னம்பலம்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'கபடதாரி'.

இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் கொரோனா ஊரடங்கினால் தடைப்பட்டன. தமிழக அரசு மீண்டும் இந்த பணிகளுக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, 'கபடதாரி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

'கபடதாரி' படத்தில் நாசர் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். அத்துடன் 15 சதவீதம் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அவர் தாமாக முன்வந்து தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,

"நாசர் மற்றும் கமீலா நாசர் ஆகியோருக்கு நன்றி. 'கபடதாரி' படத்துக்கு உங்களுக்கு வழக்கத்தை விட குறைவான சம்பளத்தையே தந்தோம், இருந்தாலும் அதிலிருந்து 15 சதவீத சம்பளத்தைக் குறைத்து கொள்ள ஒப்புக்கொண்டு டப்பிங்கை முடித்து விட்டீர்கள். படத்துக்கு நீங்கள் தந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.

உங்களைப் போலவே இன்னும் பலர் வளரட்டும். பல தயாரிப்பாளர்கள் பெரிய நஷ்டத்தில் இருக்கும்போது, எப்படி தங்கள் கடனை அடைப்பது, முதலீட்டை திரும்பப் பெறுவது, எப்போது பெறுவது என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இப்படி நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்து தயாரிப்பாளரை ஆதரிக்கும்போது அது பண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உதவிகரமாக உள்ளது". என்று தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon