மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியின் டபுள் ட்ரீட்!

மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியின் டபுள் ட்ரீட்!

மின்னம்பலம்

நடிகர் மோகன்லால் தனது 60ஆவது பிறந்தநாளை இன்று(மே 21) கொண்டாடும் நிலையில், இயக்குநர் ஜீத்து ஜோசப் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன்லால், இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் இணைந்து பணியாற்றினார். ஒரு சாதாரண மனிதனை சுற்றி நடக்கும் அசாதாரண விஷயங்களை சஸ்பென்ஸ் த்ரில்லராகக் கூறிய இந்தத் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர் ‘ராம்’ என்னும் திரைப்படத்தில் மீண்டும் இந்த கூட்டணி ஒன்றிணைவதாக அறிவிக்கப்பட்டது. மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் அந்தப்படத்தின் பூஜை கடந்த வருடம் நடைபெற்றது. தொடர்ந்து 50 சதவீத படப்பிடிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் அந்தப் படம் கைவிடப் படுவதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வந்தன.

இந்த நிலையில் மோகன்லால்-த்ரிஷா இணைந்து நடிக்கும் ‘ராம்’ திரைப்படம் கைவிடப்படுவதாக வெளிவந்த தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கடந்த இரண்டு மூன்று நாட்களாக மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ராம்’ படத்தைக் கைவிட்டு நான் அடுத்த படத்திற்கு திட்டமிடுகிறேனா எனக்கேட்டு தொடர்ந்து மெசேஜ்களும் அழைப்புகளும் எனக்கு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ராம் படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லண்டனிலும், உஸ்பெகிஸ்தானிலும் இதன் பாதிப்புகள் குறையும் போது மீண்டும் ஷூட்டிங் பணிகள் ஆரம்பிக்கப்படும். கொரோனா பாதிப்புகள் கேரளாவில் குறைந்து வரும் நிலையில் விரைவாகவே படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கேரளாவில் மட்டும் படப்பிடிப்பு நடத்த முடிந்த மற்றொரு திரைப்படத்தைத் துவங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு ‘ராம்’ படத்தைக் கைவிட்டோம் என்று பொருள் இல்லை. சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜீத்து ஜோசப் விரைவில் துவங்கவிருப்பதாகக் குறிப்பிட்ட புதிய திரைப்படம் குறித்து ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்தனர். ஆனால் வெகு விரைவிலேயே அந்த கேள்விக்கும் விடை கிடைத்து விட்டது. நடிகர் மோகன்லாலின் 60ஆவது பிறந்தநாளை சமூக வலைதளப் பதிவுகள் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை மேலும் உற்சாகப் படுத்தும் விதமாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் மிகவும் விரும்பி கொண்டாடிய மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணி இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் இணைந்து பணியாற்றும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon