மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

தனி விமானத்தில் வரும் பிருத்விராஜ் குழுவினர்!

தனி விமானத்தில் வரும் பிருத்விராஜ் குழுவினர்!

பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது சொந்த தயாரிப்பில் 'ஆடுஜீவிதம்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டுக்குச் சென்றனர். வெளிநாட்டு விமானப் பயணம் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டனில் உள்ள ‘வாடி ரம்’ என்கிற பாலைவனப் பகுதியிலேயே கடந்த 55 நாட்களுக்கும் மேலாக முடங்கினர்.

தன் கணவர் நிலையைக் கண்டு மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், படக்குழுவினர் நிலையை நினைத்துக் கொண்டிருப்பதாகவும் வருத்தப்பட்டார் அவர் மனைவி சுப்ரியா. ஆனாலும் அவர்களை அங்கிருந்து மீட்டு இந்தியா அழைத்து வர இயலவில்லை.

பல போராட்டங்களைக் கடந்து ஜோர்டனில் ஒரு சில நாட்கள் அரசாங்க அனுமதி பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாலைவனத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டனர். இந்த நிலையில் இந்தப் படக்குழுவினர் கேரளம் திரும்புவதற்காகச் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு விமானத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட 58 பேர் கொண்ட படக்குழு ஜோர்டனிலிருந்து புதுடெல்லி வரவுள்ளனர். டெல்லியிலிருந்து மற்றொரு விமானம் மூலமாக கொச்சியில் வந்து இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிருத்விராஜ் மனைவி சுப்ரியாவும் அவர் குழந்தை மற்றும் படக்குழுவினர்களின் குடும்பத்தார்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

-இராமானுஜம்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon