மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

இது புதிய முகம்: தனிமைப் படுத்திக்கொண்ட பிருத்விராஜ்

இது புதிய முகம்: தனிமைப் படுத்திக்கொண்ட  பிருத்விராஜ்

மின்னம்பலம்

மூன்று மாத காலமாக ஜோர்டன் பாலைவனத்தில் தங்கியிருந்த நடிகர் பிருத்விராஜ் படக்குழுவினருடன் தனி விமானத்தில் கேரளா வந்தடைந்தார்.

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் நாட்டிலுள்ள பாலைவனப் பகுதிக்கு சென்று இருந்தார். கொரோனா பாதிப்பின் காரணமாக படப்பிடிப்பு வேலைகள் தொடர முடியாமலும், சொந்த ஊருக்கு வர இயலாமலும் நீண்ட நாட்களாக படக்குழுவினருடன் அங்கேயே தவித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜோர்டன் நாட்டு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவு பெற்றது. இந்த நிலையில் தனி விமானத்தில் பிருத்விராஜ் படக்குழுவினருடன் இந்தியா வருவார் என்று தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக மின்னம்பலத்தில் தனி விமானத்தில் வரும் பிருத்விராஜ் குழுவினர்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அவர் பத்திரமாக கேரளா வந்தடைந்த செய்தியைத் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். முகத்தில் மாஸ்க் மற்றும் கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். பிருத்விராஜ் பத்திரமாக இந்தியா வந்தடைந்த செய்தி அவரது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

பிருத்விராஜ் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அவரது மனைவி சுப்ரியா 'புதிய முகம்' என்று கமெண்ட் செய்தார். அதற்கு பிருத்விராஜ், "பழைய முகம் தான். ஆனால் 30 கிலோ எடை குறைந்து அதிக தாடியுடன் இருக்கிறேன்" என்று பதிலளித்திருந்தார். அதற்கு சுப்ரியா, 'பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

பிருத்விராஜ் இந்தியா வந்தடைந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்த சுப்ரியா, "மூன்று மாதங்களுக்குப் பிறகு பிருத்வியும் அவரது படக்குழுவினரும் இந்தியா வந்தடைந்துள்ளனர். தற்போதைய நடவடிக்கைகளைப் பின்பற்றி அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள்.

இது எதிர்பார்ப்பு மிக நீண்ட காத்திருப்பாக இருந்தது. அவர்கள் அனைவரும் பத்திரமாக இந்தியா வர உதவி செய்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். அவர் பத்திரமாக மீண்டு வர தொடர்ந்து பிரார்த்தனை செய்து எங்களுக்கு தைரியம் அளித்த ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். அல்லி அவளது அப்பாவைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறாள். இன்னும் 2 வாரத்தில் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார்.

பிருத்விராஜ் கேரளா வந்தடைந்த செய்தி அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon