மின்னம்பலம்
பிரபல தமிழ் சினிமா ஒளிப்பதிவாளரும், 'டு லெட்' திரைப்படத்தின் இயக்குநருமான செழியன், 'இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாட்டோகிராபர்ஸ்' அமைப்பின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
'கல்லூரி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி', 'தாரை தப்பட்டை', 'ஜோக்கர்' என தமிழ் சினிமாவின் வித்தியாசமான படைப்புகளுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஒளிப்பதிவாளர் செழியன். தனித்துவமிக்க தனது திறமையால், ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவர், 2019ஆம் ஆண்டு வெளியான 'டு லெட்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார்.
'டு லெட்' திரைப்படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்ததன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும், அங்கீகாரங்களையும் செழியன் பெற்றார். இதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
திரையரங்கில் பல மடங்கு லாபத்தை ஈட்டிய 'டு லெட்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இந்த நிலையில் 'கான்' பட விழாவின் போட்டிப் பிரிவில் 'டு லெட்' திரைப்படம் திரையிடப்பட்டது.
இத்தகைய பல பெருமைகளைப் பெற்ற 'டு லெட்' படத்தின் இயக்குநர் செழியனுக்கு அகில இந்திய அளவிலான முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 'இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாட்டோகிராபர்ஸ்' அமைப்பின் உறுப்பினராக செழியன் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப் பட்டுள்ளார்.
ஒளிப்பதிவுத் துறையில் பெரும் சாதனை புரிந்தவர்களையும், டிரெண்ட் செட்டர்களையும் மட்டுமே உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் இந்த அமைப்பு செழியனை உறுப்பினராகத் தேர்வு செய்து கௌரவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தனது துறையில் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்ற ஒளிப்பதிவாளர் செழியனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா