மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு!

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு!

மின்னம்பலம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர், தனி அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், ஜூன் 30 ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், ஜூன் 30 என்கிற தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், “தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை 2020 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தேசிய ஊரடங்குக்கு முன்பாக சங்கத் தேர்தலில் போட்டியிடும் அணிகள் அறிவிக்கப்பட்டு மூன்று அணிகளும் வாக்கு சேகரிப்பதற்கான பணிகளைத் தொடங்கிய போது கொரோனா, ஏற்கனேவே நீதிமன்றத்தில் இருந்த வழக்கு ஆகியவை தேர்தலை நடத்த தடையாக அமைந்தன.

கொரோனாவால் தேர்தல் தடைபட்டாலும் கலைப்புலி தாணு, சங்க உறுப்பினர்களுக்கு தானிய மூட்டைகளை வழங்கி தனக்கான ஆதரவு தளத்தை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றினார்.

அம்மா கிரியேஷன் சிவா தலைமையிலான அணி, தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கில் கொரோனா நிவாரண நிதியை செலுத்தி ஆதரவு தளத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முரளி ராமசாமி தலைமையிலான அணி இதே போன்று கொரோனா லாக்டவுனில் சிக்கி சிரமப்படுபவர்களைத் தேடிச் சென்று உதவினார்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வேலைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

-இராமானுஜம்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon