மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

திரைக்கதை எழுதும் விஜய் ஆண்டனி

திரைக்கதை எழுதும் விஜய் ஆண்டனிவெற்றிநடை போடும் தமிழகம்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். அண்மையில், விஜய் ஆண்டனி நடிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான கொலைகாரன் படம் திரில்லர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படத்தில் அர்ஜுனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனுடன் ஒரு படம், விஜய் மில்டனுடன் ஒரு படம், மூடர் கூடம் நவீனுடன் அக்னிச் சிறகுகள், காக்கி என வரிசையாக பல எதிர்பார்க்கும் கூட்டணிகளுடன் கைகோர்த்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் அக்னிச் சிறகுகள் படத்தில் அருண் விஜய்யுடன் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், லாக் டவுன் காலத்தில் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார் இவர். இசையமைப்பாளராக திரைத்துறைக்குள் நுழைந்த விஜய் ஆண்டனி, பின்னர் ஆர்வம் ஏற்பட்டு நடிகராகவும் முயற்சி செய்து தன்னை நிரூபித்துக் காட்டியவர். வணிக ரீதியாகவும் தன்னை ஆட்டத்துக்குள் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய புதிய அவதாரமாக திரைக்கதை ஆசிரியராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். 2016ஆம் ஆண்டு, சசி இயக்கத்தில் வெளியான படம் பிச்சைக்காரன். நாட்டு நடப்புகளையும், பொது புத்தியின் மீதான விமர்சனத்தையும் ஆக்ஷனும் 'எமோஷனும்' கலந்து கூறிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், விஜய் ஆண்டனியின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அறியப்படுகிறது பிச்சைக்காரன்.

இதனைத்தொடர்ந்து, பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும், தானே அதற்கு திரைக்கதை எழுதி வருவதாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் விஜய் ஆண்டனி. அத்துடன் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சசி இயக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வேறொரு படத்தை சசி இயக்கவிருப்பதால், பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.

-முகேஷ் சுப்ரமணியம்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon