மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

எம்.ஜி.ஆர் நினைவுகளில் குழந்தையான டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆர் நினைவுகளில் குழந்தையான டி.எம்.எஸ்.

ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் பார்த்திராதக் கலைஞர் டி.எம்.எஸ். பகுதி - 2

நிவேதா லூயிஸ்

டி.எம்.எஸ்ஸுடனான தன் படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றிச் சொல்கிறார் விஜயராஜ்

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவுக்குள் பாடகர் டி.எம்.எஸ் 1946ஆம் ஆண்டு, தன் முதல் பாடலைப் பாடிய அறையின் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே நுழைந்தால் முழுக்க ஒட்டடையும் குப்பையும் மண்டிக்கிடந்தன. அங்காங்கே செடிகள் வேறு. மில் ஆட்களைக்கொண்டு மளமளவென்று அறை சுத்தம் செய்யப்பட்டு அங்கு டி.எம்.எஸ் பாடுவது போல படமெடுக்கப்பட்டது.

“இந்த இடத்தில் நின்றுதான் என் முதல் சம்பளம் ஐம்பது ரூபாயை வாங்கினேன்” என்று நெகிழ்ந்து போனார் டி.எம்.எஸ். இந்தக் காட்சியை எடுக்க ஒன்றரை ஆண்டுகள் அனுமதிக்காகக் காத்திருந்தார் விஜயராஜ். கலைஞர் அந்த ஸ்டூடியோவில் பணியாற்றியிருக்கிறார். புரட்சித் தலைவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் அங்குதான் எடுக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் தன் முதல் திரைப்பாடலை அங்குதான் எழுதினார். ஆனால், அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பாக மீண்டும் ஒருமுறை அந்த இடத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிட்டியது.

அடுத்து விஜயராஜ் கோவை பட்சிராஜா ஸ்டூடியோவுக்குப் படையெடுத்தார். “எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் 1954ஆம் ஆண்டு, டி.எம்.எஸ்ஸின் சூப்பர் ஹிட்களில் ஒன்றான மலைக்கள்ளன் திரைப்படத்தின் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல், இங்குதான் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் எம்.ஜி.ஆருக்குப் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. அவரது கொள்கை விளக்கப் பாடல்களுக்குத் தொடக்கமாக டி.எம்.எஸ் பாடிய இந்தப் பாடலைச் சொல்லலாம். பாடலை நாமக்கல் கவிஞர் எழுதியதாகச் சொல்லப்பட்டாலும்,

முதல் சில வரிகளை அவரும் மீதிப்பாடலை கோவை ஐயாமுத்து எழுதியதாகவும் சொல்பவர்களுண்டு” என்கிறார் விஜயராஜ்.

எத்தனை காலம் தான் பாடல், நன்றி: மாரி வாசுதேவன்

“எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் ‘கூண்டுக் கிளி’. அதில் ‘கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக் கிளியாக்கிவிட்டு’ என்ற பாடலை சிவாஜி கணேசனுக்கு ஏற்றவாறு ஐயா பாடியிருப்பார். இந்தப் பாடலைக் கேட்ட புரட்சித் தலைவர், அருமையான குரலாக இருக்கிறதே, இதைப் பாடியவர் யார் என்று கேட்க, மதுரையிலிருந்து வந்த சௌந்தரராஜன் என்ற பையன் என்று அவருக்குச் சொல்லப்பட்டது.

கூண்டுக்கிளி படத்தின் பாடல் மூலம்தான் எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் அறிமுகமானது. எம்.ஜி.ஆர் அந்தக் குரலால் கவரப்பட்டு, ‘மலைக்கள்ளன்’ படத்தில் ‘எத்தனை காலம் தான்’ பாடலுக்கு டி.எம்.எஸ்ஸை சிபாரிசு செய்தார்.”

கொஞ்சும் கிளியான பாடல், நன்றி: சிவகுமரன்

“எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சிராஜா ஸ்டூடியோ கோவை ராமநாதபுரம் பகுதியில் இருந்தது. தற்போது விக்னேஷ் கல்யாண மகால் என்று பெயர் மாறியிருக்கிறது. ஸ்டூடியோ அமைந்த கட்டடத்தின் முன் பட்சிராஜா ஸ்டூடியோவின் சின்னமான உலக உருண்டையின் மேல் அமர்ந்திருக்கும் கருடன் சிற்பம் ஒன்று எப்போதும் இருக்கும். மலைக்கள்ளன் உள்ளிட்ட படங்களின் டைட்டில் பாடலில் அந்தச் சின்னத்தை நீங்கள் காணலாம். அந்த கருடன் சிற்பம் உடைந்துபோயிருந்ததை நான் வருத்தத்துடன் கவனித்தேன். திருஞானம் செட்டியார் என்பவர் வசம் அந்தக் கட்டடம் இருந்தது. நான் அவரைச் சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியபோது அவர் சரியாகவே எனக்குப் பதில் சொல்லவில்லை. அடுத்த வாரம் வரும்படி சொல்லிவிட்டார். அடுத்த வாரம் சென்றால், அந்த கருடன் சிலையைக் காணவில்லை.

வைக்கோலும் தார்ப்பாலினும் போட்டு மூடப்பட்டிருந்த சிலையை என்னைக் கண்டதும் திறக்கச் சொல்லி ஊழியர் ஒருவருக்குக் கைகாட்டினார் திருஞானம் ஐயா. எனக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 17,000 ரூபாய் செலவு செய்து உடைந்திருந்த சிலையைச் சரிசெய்து வைத்திருந்தார். டி.எம்.எஸ் எப்போது வருவார்? யூனிட் நண்பர்கள் அனைவருக்கும் உணவு நானே செய்து தருவேன் என்று வரிசையாக அடுக்கிக்கொண்டே போனார்… நான் திக்குமுக்காடிப் போனேன்” என்று சொல்கிறார் விஜயராஜ்.

“அதே பட்சிராஜா ஸ்டூடியோவில் மலைக்கள்ளன் படத்தின் ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ என்ற டைட்டில் பாடலையும் டி.எம்.எஸ் ஐயாதான் பாடினார். டைட்டில் சாங்குக்கு அவர் குரல் வேறு மாதிரி இருக்கும். இரண்டே ரீல்களுக்குப் பின்பு ‘எத்தனை காலம் தான்’ பாடலுக்கு அவர் குரல் வேறொரு குரலாக மாறியிருக்கும். அத்தனை நுணுக்கமாக எம்.ஜி.ஆருக்கு ஏற்றவாறு குரலை மாற்றிப் பாடியிருப்பார். ஆளுக்குத் தக்கவாறு குரலை மாற்றிப்பாடுவதில் வல்லவர் டி.எம்.எஸ். பின்னாளில் மரகதம், கல்யாணியின் கணவன் ஆகிய திரைப்படங்களுக்கும் பட்சிராஜாவில் பாடியிருக்கிறார். பட்சிராஜா மற்றும் சென்ட்ரல் ஸ்டூடியோக்களின் முழு வரலாற்றையும் தொடரில் சொல்லியிருக்கிறேன்.”

தமிழன் என்றோர் பாடல், நன்றி: மூவீஸ் சென்ட்ரல்

கோவையிலிருந்து விஜயராஜின் வண்டி அடுத்து நேரே பாலக்காட்டுக்குச் சென்றது. “எம்.ஜி.ஆர் மனைவியுடன் வாழ்ந்த வீட்டுக்குச் செல்கிறோம் என்று சொன்னதும், குழந்தை போல குதூகலமாகிவிட்டார் டி.எம்.எஸ் ஐயா. இரவு முழுக்கத் தூங்கவில்லை. அங்கே சென்று நான் புதிய வானம், புதிய பூமி பாடல் பாடட்டுமா, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை பாடலைப் பாடட்டுமா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. எம்.ஜி.ஆர் தன் இரண்டாவது மனைவியான சதானந்தவதியுடன் வாழ்ந்த வீடான பாலக்காடு ‘சந்திரானந்தா நிலைய’த்துக்குச் சென்றோம். சதானந்தவதியின் தங்கை அங்கு இருந்தார்.

அங்கு சென்றதும் முழுக்குழந்தையாகவே மாறிப்போனார் டி.எம்.எஸ் ஐயா. இந்தச் சாதாரண வீட்டிலிருந்தா எம்.ஜி.ஆர் வந்தார்? இதுவே வேறு யார் வீடாகவோ இருந்திருந்தால் பளபளவென புதுக் கட்டடமாக மாறிப் போயிருக்குமே? இத்தனை எளிமையாக இருக்கிறதே, இப்பேர்ப்பட்ட மகானுக்கு நான் பாடியிருக்கிறேனே என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டிருந்த அவரை சற்று நேரம் அமரச் சொல்லி, இளைப்பாற்றிவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். அவரது வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவரது படுக்கையறையை இப்போது பூஜையறையாக மாற்றியிருக்கிறார்கள். அவரது உடைமைகள், அவர்கள் பழைய புகைப்படங்கள் என்று எல்லாம் அப்படியே இருக்கின்றன. அந்தப் புகைப்படங்களுக்கு மத்தியில் நின்று பேசினார் டி.எம்.எஸ் ஐயா.

படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பினோம். வடிவேலு சார், விஜயகாந்த் சார் என்று அவ்வப்போது யார் ஓய்வாக இருக்கிறார்களோ அவர்களிடம் அனுமதி பெற்று ஐயாவுடன் பேட்டி எடுத்துவிடுவேன். பி.ஆர்.ஓ என்று யாரும் கிடையாது என்பதால் எல்லாமே நானே தான் செய்ய வேண்டும். அலுக்காமல் அலைந்து திரிந்து வேலை செய்தேன். மீண்டும் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி விழுந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற என் ஆர்வம்தான் காரணம். அதன் உரிமையாளரான டி.ஆர்.சுந்தரம் சாரின் மருமகளான கலைவாணி சுந்தரம் அம்மாள் லண்டனில் வசிக்கிறார். அவர்கள் எப்போது வருவார் என்றே தெரியாது சார் என்று ஊழியர்கள் சொல்லிவிட்டார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன அலுவலகம் இன்று சேலம் நான்கு ரோடில் டி.ஆர்.எஸ் கல்யாண மண்டபம் என்று உருமாறி நிற்கிறது.

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ ஏற்காடு சாலையில் இருந்தது. படப்பிடிப்புத் தளத்தையும், பாடல் பதிவு செய்யும் இடத்தையும் தனித்தனியாகப் பிரித்தே நிர்வகித்து வந்தார் சுந்தரம். அவரவர் அந்தந்த தளங்களில் மட்டுமே இயங்க முடியும். ஆனால், இரண்டு தளங்களிலும் சுதந்திரமாக சுற்றிவந்தவர் டி.எம்.எஸ். சுந்தரம் தயாரித்த ‘தேவகி’ என்ற படத்தில் ஐயா நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் தனி சிறப்புண்டு. இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். கலைஞர் கதை வசனம் எழுதியிருக்கிறார். வி.என்.ஜானகி அம்மாள் நடித்திருக்கிறார். ‘முன்னாளில் ஆண்டவனே இப்போ தீராத துயராலே’ என்ற பெண்கள் நலனுக்கான பாடலை ‘தேவகி’யில் பிச்சைக்காரன் வேடமிட்டு டி.எம்.எஸ் பாடி நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்தில் ஐயாவை இந்தப் பாடலைப் பாடவைத்துப் படமாக்கினேன்.

பெரியார் திடலில் ஐயா வீரமணியுடன் டி.எம்.எஸ் ஐயாவைச் சந்திக்க வைத்து படம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. பெரியார் நினைவிடத்திலும் ஐயா நிற்பது, நடப்பது போல எடுக்க ஆசைப்பட்டேன். அவர் பாடிய நாத்திகப் பாடல்களை எல்லாம் தயார் செய்துகொண்டு போனோம். தங்கரத்தினம் படத்தில் ‘மனிதனும் இங்கே தன்னை மறந்தான்’, கண்ணன் வருவான் என்ற படத்தில் ‘பூமியைப் படைத்தது சாமியா’, அவன் பித்தனல்ல படத்தில் ‘இறைவன் இருக்கின்றானா’ என்ற பாடல் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டோம்.

இத்தனை நாத்திகப் பாடல்களை ஐயா பாடியிருக்கிறாரா என்று எனக்கு ஆச்சர்யம். ‘எனக்குப் பாடுவது தொழில், தொழில்தான் எனக்கு தெய்வம். எந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு எப்படிப் பாட முடியுமோ அப்படித் தானே பாட முடியும்?’ என்று எளிதாகச் சொல்லி ஐயா கடந்து சென்றார். சூரியகாந்தி படத்தில் பாடியதற்காக பெரியாரிடம் பரிசும் பெற்றிருக்கிறார் ஐயா.

‘எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இருந்த காரணத்தால் உண்மையான, ஒழுக்கமான, நேர்மையான மனிதனாக பெரியாரால் இருக்க முடிந்தது. அந்த உண்மை இருந்ததால்தான் அவரால் துணிவுடன் செயல்பட முடிந்தது. மனிதனில் தெய்வத்தைப் பார்த்தவர் அவர். தெய்வம் மனுஷ்யரூபா என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுவதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் பெரியார்’ என்றும் சொன்னார். திடலுக்குள் அதுவரை காலடி வைத்திராத முருக பக்தரான டி.எம்.எஸ்ஸும், நாத்திகவாதியான வீரமணி ஐயாவும் திடலில் சந்தித்து என் தொடருக்காகப் பேசிக்கொண்டார்கள்.

பட்டினத்தார் படத்தில் டி.எம்.எஸ் நடித்தார் என்பதால், திருவொற்றியூர் பகுதியிலுள்ள பட்டினத்தார் சமாதியை என் செலவில் சுத்தம் செய்து வெள்ளையடித்து, அதில் படப்பிடிப்பு நடத்தினோம். அவர் நடித்த பகுதிகளைப் பற்றி அவர் அங்கு பேசுவது போல எடுத்தோம்.”

டி.எம்.எஸ் நடித்த படங்களைப் பற்றி உங்கள் தொடர் பேசுகிறதா?

“1951ஆம் ஆண்டு சென்ட்ரல் ஸ்டூடியோ தயாரிப்பான ‘சுதர்சன்’ என்ற படத்தில் டி.எம்.எஸ் ஒரு சிறு வேடத்தில் நடித்தார், அதுதான் கேமிரா முன்பு அவர் முதன்முதலில் நின்றது. பி.யூ.சின்னப்பா பாடும் ‘பாண்டுரங்க நாமம் பஜி மனமே’ என்ற பாடலில் ஜால்ரா தட்டியபடி பின்னால் நிற்பார். தேவகி படம் தவிர பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் டி.எம்.எஸ். நடித்திருக்கிறார். அருணகிரிநாதர் படத்தில் அவர் பாடிய ‘முத்தைத் தரு’ பாடல் பெரிய ஹிட். கல்லும் கனியாகும் என்ற பெயரில் சொந்தப்படம் தயாரித்து நடித்தார். படம் தோல்வியடைந்ததால் நட்டமும் அடைந்தார். அதோடு தயாரிப்பு வேலைகள் தனக்கு ஒத்துவராது என்று ஒதுங்கிக்கொண்டார். மொத்தம் நான்கு படங்களில் ஐயா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நவகிரக நாயகி என்ற படத்தில் சந்திரபகவானைப் பற்றிப் பாடியபடி திரையில் தோன்று

வார். நள தமயந்தி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார். ‘சண்முகசுந்தரி’ என்ற படத்தில் ஜெயா-விஜயா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையமைத்த ‘இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன்’ என்ற பாடலை, நடிகர் முத்துராமன், நடிகை ஜெயந்தி அமர்ந்திருக்க, மேடையில் ஐயா பாடகராகத் தோன்றிப் பாடுவார். ‘பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு’ பாடலில் கண்ணதாசன் தோன்றுவது போலவே இந்தப் பாடலில் டி.எம்.எஸ் தோன்றுவார். அதேபோல பாலசந்தர் இயக்கத்தில் உருவான சர்வர் சுந்தரம் படத்தின் ‘அவளுக்கென்ன’ என்ற புகழ்பெற்ற பாடலிலும் பாடகராகவே தோன்றியிருக்கிறார். இவை எல்லாமே என் தொடரில் உண்டு” என்று சொல்கிறார் விஜயராஜ்.

இறைவனுக்கும் பெயரை வைத்தான் பாடல், நன்றி: வடவை ஜே எஸ் பாஸ்கி

முத்தைத் தரு பாடல், நன்றி: ஜெய்கணேஷ்

அவளுக்கென்ன பாடல், நன்றி: என்டர்டெயின்மென்ட் கிரியேட்டர்

‘இமயத்துடன்’ தொடரை எடுக்க ஏன் இத்தனை காலம் பிடித்தது?

“பாலக்காட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டில் மட்டுமல்லாது, சென்னை ராமாவரத்திலுள்ள அவரது வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தினோம். செவாலியே சிவாஜி கணேசனின் வீட்டிலும் அவர் மகன் ராம்குமாரின் அனுமதி கேட்டு டி.எம்.எஸ் ஐயாவைக் கூட்டிச் சென்று படமாக்கினேன். தன் அப்பா எங்கெல்லாம் அமர்வார் என்று ராம்குமார் சொன்னாரோ அங்கெல்லாம் அமர்ந்து பாடினார். அதன்பின் யாராவது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களின் நேரம் கிடைத்தால் அங்கு சென்று சிறு பேட்டி ஒன்றை ஐயாவுடன் எடுத்துவிடுவேன். தொடரை முடிக்க தாமதமாகும் என்று முன்பே சொல்லி இருந்ததால் ஐயாவும் அது பற்றிய கவலையின்றி இருந்தார்.

ஜெயா டி.வியில் ஒளிபரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வேலையைத் தொடங்கினோம். இடையே ஒரு தொலைக்காட்சி சானல் ஐயாவைப் படமெடுக்க அணுகியிருக்கிறார்கள். ‘நான் விஜயராஜுக்குக் கையெழுத்து போட்டுத் தந்திருக்கிறேன், வேறு யாருக்கும் பேட்டி தர மாட்டேன்’ என்று அவர்களிடம் மறுத்துவிட்டார். என் தொடரை அவர்கள் ஒளிபரப்புவார்களா என்று பார்க்கச் சொன்னார். நானும் அவர்களை அணுகினேன். விஜயகாந்த், வடிவேலு உள்ளிட்ட நான்கு பேரை மட்டுமே வைத்து அப்போது பேட்டிகள் எடுத்திருந்தேன். இன்னும் யார் யாரை பேட்டி காண வேண்டும் என்று பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தேன். அதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், லதா மங்கேஷ்கர், இசைஞானி இளையராஜா என்று பல பிரபலங்கள் பெயர் இருந்தது. அதைப் பார்த்த சேனலில் இருந்த பெரியவர் ஒருவர் என்னை தனியே கூப்பிட்டு அனுப்பினார்.

‘என்னிடம் இதைக் காண்பித்தது போல வேறு யாரிடமும் காண்பித்து விட வேண்டாம், உங்களை மனநலம் பாதித்தவர் என்று தவறாக எண்ணக் கூடும், உங்கள் நலனுக்கே சொல்கிறேன். லதா மங்கேஷ்கர் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா? ரஜினிகாந்த் என்ன நீங்கள் கூப்பிட்டதும் வந்து பேசித்தருவாரா? என்ன நினைத்துக்கொண்டு இப்படி பட்டியல் போட்டு வைத்திருக்கிறீர்கள்? ஏ.ஆர்.ரஹ்மான் என்ன நீங்கள் கூப்பிட்டதும் வந்துவிடுவாரா? இளையராஜா பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? இளையராஜாவுக்கும், டி.எம்.எஸ்ஸுக்கும் எவ்வளவு சண்டை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று அடுக்கிவிட்டு, ‘போய் வாருங்கள்’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்.”

தொடரும்…

டி.எம்.எஸ். பகுதி-1

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon