Kஇளையராஜாவும் டி.எம்.எஸ்ஸும்

entertainment

ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் பார்த்திராதக் கலைஞர்- டி.எம்.எஸ். – பகுதி 3

நிவேதா லூயிஸ்

டி.எம்.எஸ் அவர்கள் பற்றிய முழு ஆவணப்படம் எடுத்த விஜயராஜ் அவர்களுடனான கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தொடர்கின்றன.

**டி.எம்.எஸ் என்ற மனிதர் எப்படிப்பட்டவர்?**

“ஒருகட்டத்தில் தினமும் டி.எம்.எஸ்ஸைச் சந்தித்துவிடுவேன். அவ்வளவு பெரிய கலைஞர் எத்தனை பெரிய ரசிகராகவும் இருந்தார் என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. நானே சமைக்கிறேன், வீட்டுக்குச் சாப்பிட வாருங்கள் என்று என்னை ஒருநாள் அழைத்தார். ரசம் செய்துகொண்டிருந்தவர் என்னை அழைத்து, சமையலறை ஜன்னலைத் திறக்கச் சொன்னார். வீட்டு வாசலுக்கு என்னை அனுப்பினார். அங்கிருந்து ஒன்று முதல் ஐம்பது வரை என்னை எண்ணச் சொன்னார். எண் ஐம்பதை நான் சொல்லும்போதே ரசத்தின் வாசம் மூக்கைத் துளைத்தது. ‘என்ன வாசம் வந்ததா?’ என்று கூடவே ஐயாவின் குரலும்! அத்தனைத் துல்லியமாக நேரம் கணித்து வைத்திருந்தார். ஜன்னலில் இருந்து வாசல் வரை அந்த வாசம் வர ஐம்பது வரை எண்ண வேண்டும் என்றார். எனக்கு அப்படி ஓர் அதிர்ச்சி!

உணவை அப்படியே அள்ளிச் சாப்பிடக் கூடாது. இறைவனை வணங்கி, உணவுக்குரிய மதிப்பைத் தந்து, பொறுமையாக உண்ண வேண்டும் என்று சொல்வார். குடலுக்குத் துக்கத்தைத் தரக் கூடாது, உடல் ஆண்டவன் நமக்குத் தந்த மிகப்பெரிய தேவாலயம் என்றும் சொல்வார். கலைஞன் வயதைக் கடந்தவன். எப்போதுமே உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில் வெறித்தனமான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்றும், அதுவே மனநிறைவைத் தரும் என்றும் சொல்வார். ரயிலில் பயணிக்கும்போதுகூட, போர்த்திக் கொள்ளும் போர்வையைத் துல்லியமாகப் பயன்படுத்தி மடித்துவைக்க வைக்க வேண்டும் என்று சொல்வார்.

அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வே நிறைய பகையையும் எரிச்சலையும் சம்பாதித்துத் தந்தது. அவருக்கு திருப்தி இல்லை என்றால் பாடலை மீண்டும் மீண்டும் பாடுவார். எங்கிருந்தோ வந்தாள் படத்துக்காக ‘நான் உன்னை அழைக்கவில்லை’ என்ற பாடலைப் பதிவு செய்ய 25 முறை பாடியிருக்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி சாரைப் பேட்டி கண்டபோது அவர் இதைச் சொன்னார். ‘படத்தின் தயாரிப்பாளரான நான், நடிகர் சிவாஜி சார், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி என எங்கள் மூவருக்கும் பாடல் சரியாக இருப்பதாகவே பட்டது. ஆனால், ஐயாவோ பாடல் சரியாக வரவில்லை என்று சொல்லி 25 முறை பாடினார். காலை 8 மணிக்குத் தொடங்கிய பாடல் பதிவு நள்ளிரவு வரை தொடர்ந்தது. 26ஆவது முறை அவர் பாடிய பாடல்தான் படத்தில் வருவது’ என்று சொன்னார். பாடலின் தொடக்கத்தில் வரும் ‘நான்’ என்ற சொல்லை, தன்னைப் போல யாரும் உச்சரிக்கக் கூடாது என்று நினைத்தே அவர் பாடிய பாடல் அது!

[நான் உன்னை அழைக்கவில்லை பாடல், நன்றி: மூவீஸ்](https://www.youtube.com/watch?v=OjyQplfDeH0)

உலகில் எந்தப் பாடகரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் குரலுக்கு ஒரு தனித்தன்மை இருக்கும். ஆனால், இவரோ ஆளுக்குத் தக்கவாறு குரலை மாற்றிப் பாடிவந்திருக்கிறார். ஒரு காலத்தில் பெரிய ப்ளஸ்ஸாகப் பார்க்கப்பட்டது பின்னர் அவருக்கே வேதனையாக வந்து நின்றது. எம்.ஜி.ஆர் அப்படிப் பாடினார், சிவாஜி இப்படிப் பாடினார் என்று இவர் குரலையே நடிகர்கள் குரலாக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதை மறுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் டி.எம்.எஸ். இப்படி அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால், தன் சாதனைகளைப் பற்றித் தானே சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது.

கடைசி வரை எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் தன்னை அங்கீகரிக்கவில்லை என்ற மனக்கசப்பு டி.எம்.எஸ் ஐயாவுக்கு இருந்தது. அவர்களிடமிருந்து அவர் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்கவில்லை அவர். ‘பாகப்பிரிவினை’ படத்தின் வெற்றி விழா எக்மோர் அசோகா ஓட்டலில் நடைபெற்றது. படத்தில் பணியாற்றிய கதாநாயகன் சிவாஜி உட்பட அனைவருக்கும் ஷீல்டு வழங்கப்பட்டது. படத்தில் நடித்த மாடும் அங்கு வந்து சேர்ந்தது, அதற்கும் ஷீல்டு தரப்பட்டது.

விழா தொடங்க கடவுள் வாழ்த்தும், விழா முடியும்போது தேசிய கீதமும் டி.எம்.எஸ் பாடுவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது. அவரும் பாடி முடித்தார். தேசிய கீதம் பாடியவர், ‘எல்லோரும் ஒரு நிமிடம் நில்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அனைவரும் அப்படியே நின்றுவிட்டார்கள். ‘படத்தில் நடித்த மாட்டுக்குக்கூட ஷீல்டு தந்தீர்களே, பாடகருக்கு ஒன்றுமில்லையா?’ என்று விளாசியவர், ஊடகங்களை அழைத்து இனி பாடப்போவதில்லை என்று பேட்டியும் கொடுத்துவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பின்தான் பாடகர்களுக்கும் விழாக்களில் ஷீல்டுகள் வழங்கப்பட்டன என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம் தொடரில் பேசியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரிடம் விட்டில்பூச்சியாக இருந்தார். அவர்களும் தூபமிட்டபடி முன்னணி கதாநாயகர்களுடனான அவரது மன உளைச்சல்களை ஊதிப் பெரிதாக்கினார்கள். அவரது எதிர்வினைகள் மட்டுமே ஊடகங்களில் பெரிதாக வெளிவந்தன. இதைத்தான் நான் முதலில் தகர்த்தேன். அவரிடம் பேச வேண்டும் என்றால் நான் உடனிருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது போல மாற்றிக் கொண்டேன். யார் ஐயாவைச் சந்திக்க வேண்டும் என்றாலும் என் மூலமே முடியும் என்ற நிலைக்குக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டில் ஒரு ஆளாகவே மாறிப்போனேன். அவரது சில உறவினர்களுக்கு அது மனக்கசப்பைத் தந்தது. எனக்கு அறிமுகமானவர்களோ, ‘அவரை வைத்துத் தானே தொடர் எடுக்கிறாய், அவர் உனக்கு நிதியுதவி செய்ய மாட்டாரா?’ என்று கேட்டு என்னைக் கலைக்கவும் பார்த்தனர். எங்கள் இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான அன்பு இருந்ததால் வேறு யாரின் வேலையும் செல்லுபடியாகவில்லை, அவர்கள் எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியானது.

அதே போல பெரும் இரக்க குணம் கொண்டவர் ஐயா. கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சித்தரின் ஜீவசமாதியில் ஐயாவை வைத்துப் படப்பிடிப்பு நடத்தினோம். அவரது கீர்த்தனைகளை அங்கு பாடினார். அங்கிருந்து திரும்பும்போது கரூரில் ஒரு ஹோட்டலில் உணவருந்தினோம். கை கழுவிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் அவரைக் காணவில்லை. நேரே சமையற்கூடத்தினுள் நுழைந்து அங்கிருந்தவர்களைப் பாராட்டியவர், கையிலிருந்த 2,500 ரூபாயைப் பிரித்து அவர்கள் கைகளில் ஆளுக்கு 500 ரூபாயைத் தந்து, ‘வயிறு நிறைந்தது; நீங்கள் தந்த இட்லி அத்தனை சுவையாக இருந்தது’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். ‘ஊக்கப்படுத்தினால்தான் எந்த மனிதனுமே தன் பணியை ஈடுபாட்டுடன் செய்வான். அதுவும் அப்போதே செய்துவிட வேண்டும்’ என்று அவர்களிடம் சொன்னார்.

பாலசுப்ரமணியம் என்ற அவர் மகன் 15 வயதில் காலமானான். அவன் இறந்ததும் அவன் பெயரில் 7 லட்ச ரூபாயை வைப்பு நிதியில் போட்டுவைத்தார். அதில் வரும் வட்டியைக்கொண்டு டி.எம்.எஸ். பாலசுப்ரமணியம் அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பு தொடங்கி, அதன் மூலம் படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவி வந்தார்.”

**டி.எம்.எஸ்ஸின் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?**

“அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் நால்வர் இறந்துவிட்டார்கள். இரண்டு மகன்களும், ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். மனைவி பெயர் சுமித்ரா. அவர் மகன் செல்வகுமாரை அவ்வப்போது வீட்டில் பார்ப்பதுண்டு. மகள் மல்லிகா அக்கா, மகன் பால்ராஜ் அண்ணன் இருவரும் என்னிடம் மிக நெருக்கமாக ஒரு தாய் பிள்ளைகள் போலப் பழகுவார்கள். அவரது மகளான சந்திரிகாவின் மகன் சுந்தர் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஐயாவைப் போலவே இருப்பார். அதனால் டி.எம்.எஸ் ஐயா போல வேடமிட்டு, தொடரின் சில காட்சிகளில் சுந்தரை நடிக்க வைத்தேன். சுந்தருக்கு மேக்கப் போட்டு அவர் கண்முன் நிறுத்தியதும் அசந்து போனார் ஐயா. என்னடா என்னைப் போலவே இருக்கிறாய் என்று சொன்னார்.”

**ஜெயலலிதாவுடனான அவரது நட்பு எப்படி இருந்தது?**

“ஜெயலலிதா ஐயாவுடன் நல்ல நட்பில் இருந்தார். ஐயாவை இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமித்தார். அவர்கள் நட்பு என் தொடர் மூலமே புதுப்பிக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அன்பைத் தேடி என்ற படத்தில் ‘சித்திர மண்டபத்தில்’ என்ற பாடல், சூரியகாந்தி படத்தில் ‘ஓ மேரே தில்ருபா’ என்ற பாடல், வந்தாளே மகராசி என்ற படத்தில் ‘கண்களில் ஆயிரம் ஸ்வீட் டிரீம்’ என்ற பாடல். இந்த மூன்றுப் பாடல்களையும் டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஜெயலலிதா. ஐயாவின் பயோடேட்டாவை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார் ஜெயலலிதா. அவர் மூலம் தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. எப்பொழுதோ தரவேண்டிய விருது தாமதமாகக் கிடைத்ததில் ஐயாவுக்கு வருத்தம்தான். அரை மனதுடன்தான் விருது வாங்க டெல்லி புறப்பட்டுச் சென்றார். நல்லி குப்புசாமி செட்டியார் ஐயாவை அழைத்துச் சென்றார். அங்கு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயாவைச் சந்திக்கும் வாய்ப்பும் டி.எம்.எஸ் ஐயாவுக்குக் கிடைத்தது.

‘என்னைத் தெரியுமா?’ என்று அவரிடம் டி.எம்.எஸ் கேட்க, ‘உங்கள் பாடலைக் கேட்காத காது ஒரு காதா?’ என்று பதில் தந்திருக்கிறார் கலாம். உங்களுக்கு நான் விருது தருவதில் பெருமைப்படுகிறேன் என்று கலாம் அவரிடம் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் மரணமும் என்னை மிகவும் பாதித்தது.”

[சித்திர மண்டபத்தில் பாடல், நன்றி: தமிழ் மூவீஸ்](https://www.youtube.com/watch?v=DAf4xFxVSsU )

[ஓ மேரே தில்ருபா பாடல், நன்றி: தமிழ் சினிமா](https://www.youtube.com/watch?v=_S7_hkhCtIk)

**இளையராஜாவுடன் டி.எம்.எஸ்ஸுக்கு இருந்த பிணக்கை நீக்கி எப்படி இருவரையும் படம்பிடித்தீர்கள்?**

“இசைஞானியையும் ஐயாவையும் எப்படியாவது பேட்டி ஒன்றில் பேசவைத்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். இளையராஜாவை நேரடியாகவே சந்தித்துச் சொன்னேன். நீங்கள் கட்டாயம் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். மற்றவர்களைப் போல வியாபார நோக்கம் எனக்குக் கிடையாது. இதை ஒரு தவம் போலச் செய்கிறேன். இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் நீங்கள் பேட்டி தராமல் விடமாட்டேன் என்று சொன்னேன். அவர் என்னைக் கவனித்துப் பார்க்கவே பல காலம் ஆனது. அவரது உதவியாளர் பிரபாகர் என்னுடன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். அவரைப் பார்ப்பது போல அடிக்கடி இசைஞானியின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஒரு வழியாக முக்கால் மணிநேரம் ஒதுக்கி பொறுமையாகப் பேசிக்கொடுத்தார். டி.எம்.எஸ்ஸின் சுயசரிதை எழுதிய எத்தனையோ பேர் இறுதி வரை அவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை, பிணக்குடன் இருந்தார்கள் என்று எழுதினார்கள். ஆனால் இருவரும் மனம் திறந்து, என் தொடருக்காக ஒன்றாகப் பேட்டி தந்திருக்கிறார்கள்.”

**உங்கள் தொடர் வெளிவருவதில் என்ன சிக்கல்?**

“ஐயா 2013ஆம் ஆண்டு இறந்துபோனார். நல்லவேளையாக அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் தொடர் நிறைவடைந்துவிட்டது. அவரிடம் 150 எபிசோடுகளையும் போட்டுக் காண்பித்துவிட்டேன். பொறுமையாக அமர்ந்து ஒரு நாளைக்கு 10 எபிசோடுகள் என 15 நாள்களில் முழுத் தொடரையும் பார்த்துவிட்டார். ‘எல்லா எபிசோடையும் நான் பார்த்துவிட்டேன், இனி நான் இறந்தால்கூட எனக்குக் கவலையில்லை, சாதித்துவிட்டீர்கள் விஜயராஜ். இனி உங்கள் வாழ்க்கை உயரும், நான் நிறைவாக இருக்கிறேன்’ என்று வாழ்த்தினார். அவரது இறுதிக் காலத்தில் அவருடனே இருக்கும் பெரும் வரம் எனக்குக் கிடைத்தது. தொடரும் நிறைவு பெற்றது. ஆனால் ஒவ்வொரு எபிசோடிலும் இருக்கும் பாடல்களுக்கு உரிமைப் பிரச்சினை உள்ளது. சரிவர உரிமை பெறாவிட்டால் தொடர் வெளிவர முடியாது, வந்தாலும் எனக்கு சட்டரீதியான சிக்கல்கள் வரும். எனவே பொறுமையாக ஒவ்வொரு பாடலுக்கும் உரிமை பெற முயன்று வருகிறேன்.

2001ஆம் ஆண்டு தொடங்கிய பணி இது. இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அதை வெளியிட என்னாலான முயற்சிகளை எடுத்துவருகிறேன். யாருக்கும் எந்த அழுத்தமும் தராமல் பணியாற்ற விரும்பினேன். அவரவர் பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு பேட்டி தந்தால், அதில் முழுமை இருக்கும், நிறைவிருக்கும். கடமைக்காக நான்கு வரிகள் டி.எம்.எஸ் பற்றி மற்றவர்கள் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. உள்ளார்ந்த எண்ணங்கள் வர வேண்டும். இவை எல்லாம் தாமதத்துக்குக் காரணங்கள்.

ஒரு நிகழ்ச்சிக்காக ஐயா மலேசியாவுக்கு சென்றபோது நானும் உடன்சென்றேன். அங்கு கேமரா ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஐயா வெளிநாட்டு காட்சிகளுக்குப் பாடிய பாடல்களைப் பற்றிப் பேச வைத்தேன். அப்போது அங்குள்ள கொலம்பியா நிறுவனத்தின் அறிமுகம் நண்பர் மணிவண்ணன் மூலம் கிடைத்தது. அவர்களிடம் பீட்டா டேப்கள் இருந்தன. அங்கு உரிமையாளரின் மகன் கிறிஸ்டோஃபர் என்னிடம் பேசி, எனக்குத் தேவையான அரிய ஐந்து டி.எம்.எஸ் பாடல்கள் அடங்கிய பீட்டா டேப்களைத் தந்தார். எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதே மலேசியா கொலம்பியா கடைக்கு மீண்டும் நேரில் சென்று டி.எம்.எஸ் ஐயாவும், நானும் நன்றி தெரிவித்தோம்.

எந்த விஷயத்தையும் சட்டத்துக்குட்பட்டு நியாயமாகச் செய்ய வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதனால்தான் எந்தப் பாடலுக்கு யாரிடம் உரிமை இருக்கிறது என்று தேடித் தேடி தகவல் சேகரிக்கிறேன். பாடல் ஒன்றை எடுத்துக் கொண்டால் நெகட்டிவ் ஒருவரிடம், பாசிட்டிவ் ஒருவரிடம், வெவ்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில், தூர்தர்ஷனில், சாட்டிலைட் ரைட்ஸ் வேறொருவரிடம் என்று பெரும் குழப்பமாக இருக்கிறது. யாரோ ஒரு நபரைக் கைகாட்டி, அவரிடம் பணம் கட்டினால் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறை இருந்தால் மட்டுமே என் பணி எளிதாகும். இதை அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் எந்தக் கலைஞனின் கதையையும் இங்கே யாரும் இனி ஆவணப்படுத்த முடியாது. எனக்கு இது பெரும் சிக்கல்தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளும், 60 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இதற்குச் செலவிட்டிருக்கிறேன். தொடர் தயாரிக்க எனக்குப் பேருதவியாக இருந்த சுவாமிநாதன், செந்தில், கே.சுரேஷ்குமார், டி.எம்.எஸ் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.”

20 ஆண்டுக்கால அசுர உழைப்பை காலம் விழுங்கியிருக்கிறது. தனி மனிதனாகச் சிறு வீட்டில் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் கையில் இறுகப் பற்றிக்கொண்டு வாழ்கிறார் விஜயராஜ். மூன்றாவது மாடியிலிருந்து கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம். தாய்ப் பூனை இப்போதும் தலைதூக்கி எங்களைப் பார்க்கிறது. அதன் கண்களில் சிறு சிநேகமும் இப்போது தெரிகிறது. தன் குட்டிகளை நெருக்கிக்கொள்கிறது. எங்கோ தொலைவில் ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற டி.எம்.எஸ்ஸின் பாடல் தேய்ந்து ஒலிக்கிறது. மரணமில்லாக்

கலைஞனுக்கு நம் அஞ்சலி.

முற்றும்

[டி.எம்.எஸ். பகுதி 1](https://minnambalam.com/entertainment/2020/05/25/12/tm%20soundarajan-vijayaraj-special-article)

[டி.எம்.எஸ். பகுதி 2](https://minnambalam.com/entertainment/2020/05/26/8/tms-serial-shooting-spot-expreience-share-by-vijayaraj)

**கட்டுரையாளர் குறிப்பு**

நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *