மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

விளம்பரத்திலும் வர்க்க மனோபாவம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

விளம்பரத்திலும் வர்க்க மனோபாவம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

எல்லாக்காலங்களிலும் வாடிக்கையாளர்களை 'கவரும்' விதத்தில், விளம்பரங்களை வெளியிடுவதில் பெருநிறுவனங்கள் தாமதிப்பதேயில்லை. தங்கள் வாடிக்கையாளர் யார் என எளிதாக கணித்துவிடும் இவை, அவர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் விளம்பரங்களையும் அதில் சில விஷமமான கருத்துக்களையும் உள்ளடக்கத்தில் வைத்துவிடுகின்றன. வர்க்க ரீதியிலான மனோபாவத்தை கட்டமைப்பதிலும், அதனை நிலைநிறுத்துவதிலும் மீடியாக்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக பல கோடி மக்களை தினமும் சென்றடையும் விளம்பரங்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. அச்சு முதல் டிஜிட்டல் ஊடகங்கள் வரை அனைத்து வழியிலும் மக்களை எளிதாக சென்றடைந்துவிடுகின்றன விளம்பரங்கள். ஆனால், அதற்கான பொறுப்புணர்வும் அறமும் விளம்பரத்தை உருவாக்குபவர்களிமும், நிறுவனங்களிடமும் இருக்கிறதா என்பது தான் மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.

இந்தக் கொரோனா பெருந்தொற்றின் சமயத்திலும் கூட, "தொடர்ந்து எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள், கொரோனாவை விரட்டுங்கள்","கைகளை மட்டும் சுத்தம் செய்தால் வைரஸ் அழியுமா, தலையையும் எங்கள் ஷாம்பூ போட்டு கழுவுங்கள்" என தீபாவளி, ரம்ஜான் போல இம்முறை பெருந்தொற்றை மையமிட்டு விளம்பரங்கள் சீஸன் அடிப்படையில் புதிது புதிதாக வெளிவருகின்றன.

அந்த வகையில், பிரபல தண்ணீர் சுத்திகரிப்பான்களை விற்பனை செய்யும் 'கென்ட்' நிறுவனம் அண்மையில் ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இரண்டு படங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. முதல் படத்தில் வீட்டு பணிப்பெண்ணின் கைகள் சப்பாத்தி மாவை பிசைவதை போன்ற படம். அப்படத்திற்கு மேலே உள்ள தலைப்பு, “உங்கள் வேலைக்காரி கோதுமை மாவை கைகளால் பிசைய அனுமதிக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டு இருக்கும். இரண்டாவது படத்தில், "அவள் கைகள் அசுத்தமாக இருக்கலாம்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் கீழே, மாவை பிசைவதற்கு கென்ட் சப்பாத்தி மற்றும் பிரெட் மேக்கரைத் தேர்வு செய்யுங்கள் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோமேஷன் இந்த நேரத்தில் சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைதளங்களில் இது வைரலாகத் துவங்கியது. இந்த விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்களை #BoycottKent என்ற ஹேஷ்டேக்குடன் பலரும் இந்த நிறுவனத்திற்கு எதிராக டிவீட் செய்தனர். மேலும், "கொரோனா காலத்திலும் தங்கள் சுயலாபத்திற்காக பாரபட்சமான முறையிலும் வர்க்க ரீதியிலான மனோபாத்தை மீட்டுருவாக்கம் செய்தும் வரும் இந்த விளம்பரத்தை எதிர்ப்போம்" என பலரும் சமூகவலைதளத்தில் இதன் ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து வந்தனர். பிரபு ரஸ்தான் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "கோவிட் தொற்று பல பேராசை கொண்ட நிறுவனங்களின் அசிங்கமான முகங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த மோசமான விளம்பரம், பெண்கள் கைகளின் தூய்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது" என பதிவிட்டுள்ளார்.

விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, கென்ட் நிறுவனம் மன்னிப்பு கோரி இருக்கிறது. "கென்ட் விளம்பரத்தை வெளியிட்டதற்கு எங்களை மன்னித்து கொள்ளவும். இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆகையால் இது திரும்பப் பெறப்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாங்கள் மதிக்கிறோம்" என்று கென்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா கூறி உள்ளார்.

நடிகரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, சுகாதார தயாரிப்பு நிறுவனமான கென்ட் ஆர்ஓ சிஸ்டம்ஸின் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை "பொருத்தமற்றது" என்று கூறியதுடன், அது மதிப்புகளுடன் எதிரொலிக்கவில்லை என்று கூறினார். ஹேமமாலினி தனது அறிக்கையில், "கென்ட் நிறுவனத்தின் தலைவர் ஏற்கனவே தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் நான் மதிக்கிறேன், நிற்கிறேன் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று கூறினார்.

தொற்றுநோயுடன் தொடர்புடைய பயம் நாடு முழுவதும் பல வீட்டு உதவியாளர்களை வேலையில்லாமல் விட்டுவிட்ட நேரத்தில், இந்த விளம்பரம் வெளியானது பலரையும் அதிருப்தி அடையவைத்துள்ளது.

-முகேஷ் சுப்ரமணியம்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon