மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

படப்பிடிப்புக்காக நிஜ விமானத்தை வெடிக்க வைத்த நோலன்

படப்பிடிப்புக்காக நிஜ விமானத்தை வெடிக்க வைத்த நோலன்

தனது திரைப்படங்களில் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவு வைக்காத பிரபல ஹாலிவுட் இயக்குநர் நோலன், தான் இயக்கும் ‘டெனெட்’ திரைப்படத்திற்காக நிஜ விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி வெடிக்க செய்துள்ளார்.

‘மெமெண்டோ’, ‘த ப்ரஸ்ட்டீஜ்’, ‘டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெலார்’ போன்ற பிரபல ஹாலிவுட் திரைப்படங்களின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். வித்தியாசமான திரைக்கதை மற்றும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் காட்சி அமைப்புகளால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை நோலன் சம்பாதித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் தற்போது ‘டெனெட்’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜூலை மாதம் வெளியாகக் காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக ‘போயிங் 747’ரக நிஜ விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி வெடிக்க வைத்துள்ளனர்.

இதன் காரணத்தை சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நோலன் வெளிப்படுத்தியுள்ளார். அதில் பேசிய அவர், “விமானம் வெடித்து நொறுங்கும் அந்த குறிப்பிட்ட காட்சியை, மினியேச்சர் செட் அமைத்து கிராஃபிக்ஸின் உதவியுடன் படமாக்கலாம் என்று தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் விக்டர்வில், கலிபோர்னியா போன்ற பகுதிகளுக்கு படக்குழுவினருடன் லொக்கேஷன் தேடி செல்லும் பொழுது சில பழைய விமானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தோம்.

அதற்குப் பிறகுதான் செட் மற்றும் கிராஃபிக்ஸின் மூலம் அந்தக் காட்சியைப் படமாக்குவதை விடவும் நிஜ விமானத்தையே வெடிக்க வைத்து கேமராவில் படமாக்கலாம் என்று திட்டமிட்டோம்.

இதைக் கேட்கும் போது உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் அது எங்களுக்கு சரி என்று தோன்றியது. எனவே தான் எங்களது ஸ்பெஷல் எஃபெக்ட் சூப்பர் வைசர் மற்றும் ப்ரொடக்‌ஷன் டிசைனர் போன்ற தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் விமானத்தை வெடிக்க வைத்து கேமராவில் படமாக்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon