மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

என்றும் மறவாத மைல்கல்: அருண் விஜய் நெகிழ்ச்சி!

என்றும் மறவாத மைல்கல்: அருண் விஜய் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த ஒரே பாதையில் மட்டுமே பயணிக்காமல் வில்லனாகவும், பிற வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியவர் நடிகர் அருண் விஜய்.

தமிழில் மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை அவர் சம்பாதித்தார். 1995ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்தாலும் 2001ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டவர் பூமி’ திரைப்படம் நடிகர் அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் புதிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அந்தத் திரைப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதுகுறித்த நினைவுகளைப் படத்தின் இயக்குநர் சேரன் மற்றும் கதாநாயகன் அருண் விஜய் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

‘பாண்டவர் பூமி’ படத்தின் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம். இன்னும் நெடுந்தூரம் போங்கள். பார்த்து ரசிக்கிறேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றி’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.

அவரது வாழ்த்துகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்த நடிகர் அருண் விஜய், ‘என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்று தான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார்.

நடிகர் அருண் விஜய் திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஏராளமான ரசிக இதயங்களை சம்பாதிக்க வழியாக அமைந்த திரைப்படம் ‘பாண்டவர் பூமி’. 19 வருடங்கள் கடந்தும் அந்தத் திரைப்படத்தின் நினைவுகளை இயக்குநர் சேரன் மற்றும் நடிகர் அருண் விஜய் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் பகிர்ந்திருக்கும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon