மாற்றத்திற்கு வழிகாட்டும் சிம்பு, சுரேஷ் காமாட்சி

entertainment

கொரோனா வைரஸ் மனித வாழ்வில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள், சடங்குகள் அனைத்திற்கும் விடுமுறை கொடுக்க வைத்திருக்கிறது.

‘மாறும் என்ற வார்த்தையைத் தவிர மற்றவை எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டதே’ என்பது காரல்மார்க்ஸ் இந்த உலகத்திற்குக் கூறி சென்ற வார்த்தை. தமிழ் சினிமாவில் அந்த மாறுதல் விரைவாகவே நடக்கத் தொடங்கியிருக்கிறது.

தான் ஹீரோவாக நடித்துத் தயாரித்த ‘அண்ணாதுரை’ திரைப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கிய விநியோகஸ்தருக்கு 80% நஷ்டம் ஏற்பட்ட போது, நஷ்டத்தில் பங்கேற்க முடியாது என்று, இறுதிவரை உறுதியாக இருந்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. அவர் கொரோனாவுக்குப் பின் தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

இந்த மாற்றம் அனைத்து நடிகர்களிடமும் ஏற்படும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்தவொரு முன்னணி ஹீரோவும் இன்று வரை அது சம்பந்தமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தங்கள் நிலைபாடு என்ன என்பதையும் அறிவிக்கவில்லை. கொரோனாவுக்கு பின் சினிமா தேக்க நிலையில் இருந்து மீண்டு வருமா என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை.

இருந்தபோதிலும் இந்த நிலவரம் எல்லாம் தெரியாமல் ட்விட்டர் கூலிகள் வெளியிடும் வசூல் நிலவரங்களை நம்பிக்கொண்டு கோடிகளில் சம்பளம், 50% அட்வான்ஸ், 6 மாதம் கழித்து கால்ஷீட் தருகின்றேன் என்று கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றனர் இரண்டாவது, மூன்றாவது நிலையில் இருக்கும் ஹீரோக்கள்.

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைக்குரிய நடிகராக அறியப்பட்ட சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரு வருட போராட்டத்திற்குப் பின் இவ்வருட ஆரம்பத்தில் தொடங்கினார்.

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த குழலில் கொரோனா குறுக்கிட்டு முடக்கி விட்டது. இன்றைய குழலில் படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி கொடுத்தாலும் நடத்த முடியாது என்கிறது தயாரிப்பு தரப்பு.

மாநாடு படத்திற்காக இணைந்திருக்கும் சிலம்பரசன், இயக்குநர் S.J.சூர்யா, இயக்குநர் வெங்கட்பிரபு கூட்டணியில் நடிகர்களுக்கு சம்பளம் தராமல், படத்தின் வியாபாரம், வசூல் அடிப்படையில் மற்றொரு படத்தைத் தயாரிக்கும் முயற்சியை சுரேஷ் காமாட்சி தொடங்கியுள்ளார். இதற்கு சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட்பிரபு என அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மாநாடு படத்திற்கு முன்னதாக, பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு 2020 தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது. இது பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவது உண்மை தான். அதற்கான பூர்வாங்க அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்

**-இராமானுஜம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *