மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

நிறம் தந்த அனுபவம்: மாஸ்டர் கதாநாயகி

நிறம் தந்த அனுபவம்: மாஸ்டர் கதாநாயகி

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா மோகனன், நிறத்தின் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

நிறவெறி காரணமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடுமைகள் இன்று உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும், இனவெறிக்கும் எதிராகப் பொதுமக்களும், பிற பிரபலங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிற வேறுபாடு காரணமாகத் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எனக்கு 14 வயது இருக்கும்போது, எனது நெருக்கமான நண்பர் ஒருவர் ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார். டீ குடித்தால் அவர் கறுப்பாக மாறிவிடுவார் என்ற ஒரு வித்தியாசமான நம்பிக்கையில் அவரது அம்மா எப்போதும் அவரை டீ குடிக்க அவரை அனுமதிப்பதில்லையாம். அவர் ஒருமுறை டீ வேண்டும் என்று கேட்டதற்கு, 'நீ டீ குடித்தால், அவளை (மாளவிகா) போல கறுப்பாக மாறி விடுவாய்' என கூறினார்.

அவன் நல்ல நிறமான மகாராஷ்டிரா பையன். நான் கோதுமை நிற தோல் உடைய மலையாளி பெண். நாங்கள் சந்தித்து அப்போது வரைக்கும் நான் இப்படி நிறத்தின் அடிப்படையிலான வேறுபாட்டை உணர்ந்ததே இல்லை. இது எனக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் என்னுடைய தோல் நிறத்தைப் பற்றி அதுவரை யாரும் இப்படி விமர்சித்ததே இல்லை.

நமது சமூகத்தில் மிக அதிக அளவில் நிற வெறி மற்றும் அதன் அடிப்படையில் வேறுபாடு காட்டும் மனநிலை சாதாரணமாகவே இருக்கிறது. கறுப்பாக இருப்பவரை 'காலா' எனக் கூப்பிடுவதை தினமும் பார்க்க முடிகிறது. தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து வருபவர்கள் மீது தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் இன வேறுபாடு காட்டப்படுகிறது.

கறுப்பு நிறத்தில் இருப்பவர்கள் அனைவரையும் மதராஸி என்று ஏளனமாகக் கூறுகின்றனர். தென்னிந்தியர் என்றாலே கறுப்பாகத்தான் இருப்பார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். வடகிழக்கு இந்தியாவிலிருந்து வரும் நபர்கள் அனைவருமே 'சிங்கி' என்று அழைக்கின்றனர்.

கறுப்பாக இருப்பவர்களை 'நீக்ரோ' என்று அழைக்கின்றனர். வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகு என்றும் கறுப்பாக இருப்பவர்கள் அழகில்லை எனவும் குறிப்பிடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இருக்கும் நிறவெறி பற்றி பேசுகிறோம். ஆனால், அதே நேரத்தில் நமது அருகில் நமது வீடு, நட்பு வட்டாரம், சமுதாயத்தில் நடப்பதைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை எதிர்த்தும் நாம் குரல் கொடுக்க வேண்டும். நம்மைச் சுற்றியும், ஒவ்வொரு நாளும் இது நடக்கத்தான் செய்கிறது.

நீங்கள் நல்ல, அன்பான நபராக இருப்பதுதான் உண்மையான அழகு, அது தோலின் நிறத்தைப் பொறுத்தது இல்லை” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon