மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

என்னை வாழ்த்துவதற்கு பதிலாக.... எஸ்பிபி வேண்டுகோள்!

என்னை வாழ்த்துவதற்கு பதிலாக.... எஸ்பிபி வேண்டுகோள்!

தனது பிறந்தநாளுக்கு யாரும் தனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டாம் என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ மூலமாகத் தெரிவித்துள்ளார்.

தனது தனித்துவமிக்க குரலால் ஏராளமானவர்களை தனது இசைக்கு அடிமையாக்கியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1946 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர், தனது 20 வயதில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஏராளமான இந்திய மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். பாடகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பின்னணி குரல் கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி ஏராளமானவர்களைக் கவர்ந்தார். 70 வயதைக் கடந்தும் கூட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்று அனைவரும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் அவரது ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தவருடம் தனது பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு தெரிவித்தாலும் தான் அவற்றிற்கு பதில் கூறப்போவதில்லை எனவும் குறிப்பிட்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “அன்பு நெஞ்சங்களுங்கு வணக்கம். ஜூன் 4ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள். தயவு செய்து அந்த நாளோ, அதற்கு பிறகு, அதற்கு முந்திய நாட்களிலோ எனக்கு வாழ்த்து அனுப்புவதோ, பூங்கொத்துகள் அனுப்புவதோ, ஃபோன் செய்து என்னை ஆசீர்வதிப்பதோ தயவு செய்து பண்ணாதீங்க. ஒருவேளை நீங்கள் அப்படி பண்ணாலும் நான் அதற்கு பதில் கொடுக்கமாட்டேன்.

நான்காம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தது பெரிய விஷயம் இல்லை . உலகம் எல்லாம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கு. சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டத்தில் சிலர் இருக்காங்க, உங்களால் முடிந்தால் அவங்களுக்கு கொஞ்சம் சோறு போடுங்க. உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை பண்ணுங்க. இந்த உலகம் இப்போதும் இருக்கும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வெளியில் வர வேண்டும். இந்த கொரோனாவில் இருந்து எல்லோரும் விடுவிக்கப்பட வேண்டும். எல்லோரும் சாந்தி மயமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை பண்ணுங்க. என்னுடைய அபிப்பிராயத்தை மன்னியுங்க. தயவு பண்ணி நான் சொன்னதை செய்யுங்க” என்று அவர் கூறியுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon