மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

விஜய் சேதுபதியா, சிவகார்த்திகேயனா?: சசியின் அடுத்த டார்கெட்!

விஜய் சேதுபதியா, சிவகார்த்திகேயனா?: சசியின் அடுத்த டார்கெட்!

பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி அல்லது சிவகார்த்திகேயன் ஆகியோரில் ஒருவர் நாயகனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

நம்பிக்கைக்குரிய இயக்குநர்களுள் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சசி. மென்மையும் இறுக்கமும் கொண்ட திரைக்கதைக்காக அறியப்படும் சசி, தனது பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிச்சைக்காரன்' படம் மூலம் வணிக ரீதியிலான தனது இடத்தையும் நிரூபித்தார். விஜய் ஆண்டனி நடித்த இந்த படத்திற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இயக்குநர் சசி, ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளதால், லாக் டவுன் முடிந்தவுடன் அப்படத்தை துவங்கவுள்ளார். இதனால் பிச்சைக்காரன் 2-வை வேறொரு இயக்குநர் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. சசியின் கடைசி படமான சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சசி முன்னணி நட்சத்திரத்துடன் ஒரு படத்தில் இணையவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு சசி தனது திரைக்கதை வேலையை முடிக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வார். ஹரிஷ் கல்யாணுடனான தனது படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை அவர் முடித்துவிட்ட நிலையில், கொரோனா தொற்றுக் காலமான இந்த சமயம் மற்றொரு ஸ்கிரிப்டையும் விரைவாக முடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சசி தனது படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி அல்லது சிவகார்த்திகேயனை உள்ளிழுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது ஹரிஷ் கல்யாணுடன் படத்தை முடித்தவுடன் இந்தப் படத்தை துவங்க முடிவெடுத்திருக்கிறார் சசி.

இதற்கிடையில், விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஈடுபட்டுள்ளார். மறுமுனையில், சிவகார்த்திகேயன் தனது 'டாக்டர்', 'அயலான்' ஆகிய படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

-முகேஷ் சுப்ரமணியம்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon