மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஹைவோல்டேஜ் வார்த்தைகள்: பிரசன்னா விளக்கம்!

ஹைவோல்டேஜ் வார்த்தைகள்: பிரசன்னா விளக்கம்!

மின்சார வாரியம் குறித்து தான் ட்விட்டரில் இட்ட பதிவு குறித்து நடிகர் பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பிரசன்னா, ‘இந்த கோவிட் பொதுமுடக்க நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை உங்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்’என்று கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். வழக்கத்தை விடவும் பல ஆயிரம் ரூபாய் அதிகமாக தனக்கு மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் தான் அவ்வாறு குறிப்பிட்டதாக பிரசன்னா பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார். பிரசன்னாவின் ட்விட்டர் பதிவின் கீழ் பலரும் தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாகக் கூறி மின்சார வாரியத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியது. இது தொடர்பாக மின்னம்பலத்தில் மின்சார வாரியத்தின் கொள்ளை: பிரசன்னா கேள்வி!என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து நடிகர் பிரசன்னா வீட்டிற்கு மின்கட்டணம் அதிகமாக வந்ததன் காரணத்தைக் குறிப்பிட்டு மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‘பிரசன்னா வீட்டில் நான்கு மாதத்தில் 6920 யூனிட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அது இரண்டாக பிரிக்கப்பட்டு 3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.21,316 என மொத்த மின் கட்டணம் ரூ.42,632 ஆகும். இவற்றில் முந்தைய மாத கட்டணம் ரூ.13,528 கழிக்கப்பட்ட பின் ரூ.29,104 மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட 13,528 ரூபாயை செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632/- ஆக உள்ளது.’ என்று விளக்கம் அளித்திருந்தனர். மேலும், ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணம் குறித்து நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.’ எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் பிரசன்னா இதுகுறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து பத்து நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌ , மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌ . அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌ நான்கு மாத கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லை.

அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவுபேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌. மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்னையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியாத்தையோ அரசையோ குறை கூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌. மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பின்குறிப்பு என்று குறிப்பிட்டு, “என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌.” எனவும் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 4 ஜுன் 2020

அடுத்ததுchevronRight icon