மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

OTT-க்குள் நுழையும் மணிரத்னம்

OTT-க்குள் நுழையும் மணிரத்னம்

சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் அமேசானில் வெளியிடப்படும் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளார் மணிரத்னம்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக அறியப்படும் மணிரத்னம், தனது பொன்னியின் செல்வன் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்கான திட்டமிடுதலில் இருக்கிறார். லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் ஒன்றாக இணைந்து பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் சுமார் 40 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அண்மையில் மணிரத்னம் தெரிவித்திருந்தார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் OTT தளத்திற்குள் முதன்முறையாக நுழைய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய புராணங்களில் உள்ள நவரசங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்பது கதைகள் அடங்கிய ஒரு வெப்சீரிஸ் உருவாகவுள்ளது. இதனை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும், கிரியேட்டிவ் டைரக்டராகவும் இதில் அவர் பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒன்பது கதைகளையும் ஒன்பது வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இதன் பணிகள் கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குநர்களாக உறுதியாகியுள்ள நிலையில், மீதமுள்ள இயக்குநர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.

அமேசானில் வெளியாகும் இந்த வெப்சீரிஸ் மூலம் வரும் பணம், இந்த கொரோனா லாக்டவுனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். விரைவில் இது குறித்த தகவல்களும் அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது.

-முகேஷ் சுப்ரமணியம்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon