மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

அடுத்த கட்டத்திற்கு நகரும் மாமதுரையின் அன்னவாசல்!

அடுத்த கட்டத்திற்கு நகரும் மாமதுரையின் அன்னவாசல்!

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஏனென்றால் அதில் மட்டுமே போதும் என்ற மனநிறைவு மனிதருக்கு கிடைக்கும்.

மன்னர்கள் வழி போக்கர்கள், வியாபாரிகள் தங்கி செல்வதற்காக அன்னசத்திரங்களை தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டி வைத்து நிர்வகித்து வந்ததாக பண்டைய வரலாறுகள் கூறுகின்றன. மக்களாட்சியில் இந்த அன்னசத்திரங்கள் கைவிடப்பட்டது. அன்னதானம், சமபந்தி போஜனம் போன்றவை அரசியல்வாதிகளின் வாக்குவங்கி கருவியாக மடைமாற்றம் கண்டு அது இன்று வரை தொடர்கிறது. இதுபோன்ற நோக்கம் இன்றி தமிழகத்தின் வடலூர், கர்நாடக மாநிலம் தர்மசாலாவிலும் அணையா அடுப்புகள் மூலம் இன்றும் அன்னதானம் வழங்குதல் நடைபெற்று வருகிறது.

இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது அரசியல், கட்சி எல்லைகளை கடந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமல்படுத்திய 'மாமதுரையின் அன்னவாசல்'. முழுக்க கொடையாளர்களின் பங்களிப்புடன் செயல்படுத்தபட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தில் எந்தவொரு கட்சி அடையாளம், தனி நபர் பெருமை முன்னிலைப்படுத்தி அடையாளப்படுத்தப் படவில்லை.

இது சம்பந்தமாக சு.வெங்கடேசன் குறிப்பிடுகிற பொழுது, "ஊரடங்கால் தனித்து விடப்பட்டவர்களின் துயரங்களுக்கு அருமருந்தாக, மதியவேளை உணவினை அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று கொடுக்கும் திட்டத்தை மே முதல் தேதியான தொழிலாளர் தினத்தன்று தொடங்கினோம். ஒன்பது மையங்களில் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு உணவு வழங்கி தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு ”மாமதுரையின் அன்னவாசல்” எனப் பெயரிட்டோம்.

நவீன ஓவிய ஆளுமை ட்ராட்ஸ்கி மருது அவர்கள் அன்னவாசலுக்கான இலட்சினையை வரைந்து தந்தார். மதுரைக்கோட்டையின் மேற்குவாசலுக்கு முன்பு தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட உணவோடு அன்னவாசல் அறிவிப்பினை வெளியிட்டோம். ”இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு தினசரி உணவு வழங்குவதெல்லாம் சாத்தியப்படுகிற வேலையா?” என்ற கேள்வியைக் கேட்டபடி தினசரி அதனை சாத்தியப்படுத்திக் கொண்டிருந்தார்கள் எம் தோழர்கள்.

தொடங்கிய வேகத்திலேயே இரண்டாயிரத்து ஐநூறாக இருந்த உணவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தொட்டது. ஒன்பதாக இருந்த சமையற்கூடங்களின் எண்ணிக்கை பதினெட்டாகப் பரிணமித்தது. இதற்காக உதவிகளை வழங்க முன்வந்த நல்ல உள்ளங்களின் எண்ணிக்கையின் உயர்வே இந்த உயர்வுக்கு அடிப்படை.

பதினெட்டு மையங்களில் சுமார் ஐநூறு பேர் இந்தப்பணியில் நாள்தோறும் ஈடுபட்டனர். ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது, ஒரு மாநாட்டினை நடத்தி முடிப்பது பலருக்கும் அனுபவப்பட்ட வேலை. ஆனால் ஐயாயிரம் பேருக்கு முப்பத்தி ஐந்து நாள்களுக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் உணவுப் பொட்டலங்களை அளிப்பது எளிய காரியமல்ல. ஆனால் இந்த வேலையை மிகச்சிறப்பாக நாங்கள் செய்து முடித்திருக்கிறோம் என்றால், இப்பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தோழரும் நண்பரும் கொடையாளரும் உணர்வுப்பூர்வமாய் தங்களை இத்திருப்பணிக்கு ஒப்புக்கொடுத்ததே காரணம். யாருடைய கட்டளைக்கோ, வேண்டுகோளுக்காகவோ செய்யப்பட்ட காரியமல்ல இது.

காலத்தின் கட்டளையை ஏற்று இன்முகத்தோடு செய்துமுடித்த காரியம். இடுக்கண் களைய எம்மால் இயன்ற முயற்சி. பதினெட்டு சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, நாற்பதுக்கும் மேற்பட்ட மையங்களிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு அது பிரிக்கப்பட்டு,250 பேரால் விநியோகிக்கப்பட்டு, ஐயாயிரம் பேருக்கு நாள்தோறும் மதியம் ஒன்றரை மணிக்குள் உணவு போய்ச் சேர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு மையத்திலும் சமையல் பொறுப்பாளர் ஒருவர், பொட்டலங்கள் கட்டும் பணிக்கான பொறுப்பாளர் ஒருவர், விநியோகப் பொறுப்பாளர் ஒருவர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பாளர் ஒருவர். பதினெட்டு மையங்கள், பதினெட்டுத் தலைமைப் பொறுப்பாளர்கள், இருபது வாட்ஸ் அப் குழுக்கள், சமையல் தொடங்கும் நேரத்திலிருந்து விநியோகம் முடியும் நேரம் வரை வாட்ஸ்அப் குழுவில் தொடர்ந்து பதிவிடுதல் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நால்வர் என அனைத்தும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடந்த பணிகளல்ல. தேவைக்கு முகங்கொடுத்து வேலை செய்தபடியே எங்களை நாங்கள் தகுதிப்படுத்திக் கொண்டோம், திறனைக் கூட்டிக்கொண்டோம்.

நல்ல திட்டமிடலும் செறிவான முன்னனுபவமும் கொண்டு தொடங்கப்படும் பணிகள் உண்டு. ஆனால் ஒரு பேரிடர் காலத்தில் மனிதத் துயர் துடைக்கத் துடிக்கும் கரங்கள் நீளும் வேகமே முக்கியம். நோக்கத்தின் நேர்மை போதாமைகளைத் தாண்டி பயணிக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது. அழகர்கோயில் மலையடிவாரம் தொடங்கி வண்டியூர் வைகைக்கரை வரை குறுக்கும் நெடுக்குமாக மஞ்சள்வண்ண டீசர்ட் அணிந்த அன்னவாசல் செயல்பாட்டாளர்கள் உணவேந்திச் சென்றுகொண்டே இருந்தார்கள். இறுகிய ஊரடங்கு நடைமுறையில் இருந்த மே மாதம் முழுவதும் உணவுகொடுத்து முடித்திருக்கிறார்கள்.

பதினெட்டு மையங்களில் உணவு சமைத்து, நாள்தோறும் ஐயாயிரம் பேருக்கு உணவுவழங்கும் திட்டம் ஜூன் 4 உடன் நிறைவுபெறுகிறது. ஆனால் அன்னவாசலின் பணி ஊரடங்கு நீடிக்கும் வரை தொடரும். அரசு பொது மருத்துவமனைகளை மையப்படுத்தியும் யாது மற்றவர்களாய் சாலைகளில் வீழ்ந்து கிடப்பவர்களை நோக்கியும் ஜூன் முதல் அன்னவாசலின் மதிய உணவு சென்று சேரும்" என்கிறார்.

-இராமானுஜம்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon