மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

பெண் தயாரிப்பாளரை எச்சரிக்கும் ராணுவத்தினர்!

பெண் தயாரிப்பாளரை எச்சரிக்கும் ராணுவத்தினர்!

ராணுவ வீரர்களை தவறான முறையில் சித்தரித்ததாக பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களையும், வெப் சீரிஸ்களையும் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர். பத்மஸ்ரீ விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்ற இவர் தற்போது ட்ரிபிள் எக்ஸ்-2 என்ற இணையதளத் தொடரை தயாரித்துள்ளார். 'XXX-2' என்ற அந்தத் தொடரில் ராணுவ வீரர்களையும் அவரது குடும்பத்தினரையும் தவறான முறையில் சித்தரித்து இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆபாச காட்சிகள் நிறைந்த அத்தொடருக்கு சமூக வலைத்தளங்களிலும் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், முன்னாள் ராணுவ வீரரும் தியாகிகள் நல அறக்கட்டளையின் தலைவருமான மேஜர் டி.சி.ராவ் இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ராணுவ வீரர்கள் நமது நாட்டுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்து வருகிறார்கள். ஆனால், இந்தத் தொடரின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ராணுவ வீரர்களின் மனைவிகள் பிற நபருடன் தொடர்பில் இருப்பதாக தவறான முறையில் சித்தரித்துள்ளனர். ராணுவ வீரர்களை அவமதிக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது." என்று கூறியுள்ளார்.

மேலும், "ராணுவ சீருடையில் இருக்கும் வீரர்களை அவமதிக்கும் பல காட்சிகளும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஏக்தா கபூர் நீக்கவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏக்தா கபூரின் ஆல்ட் பாலாஜி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களும், இந்தி பிக்பாஸ் 13ஆவது சீசன் போட்டியாளர் இந்துஸ்தானி பாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon