மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

இடதுசாரியின் மொட்டைக்கடுதாசி: ஜெயமோகனுக்கு எழுத்தாளர்கள் கண்டனம்!

இடதுசாரியின் மொட்டைக்கடுதாசி: ஜெயமோகனுக்கு எழுத்தாளர்கள் கண்டனம்!

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைதளத்தில் 'ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்' என்ற தலைப்பில் வெளியான மொட்டைக்கடுதாசி தமிழ் எழுத்துலகையும் இடது சாரி சிந்தனையாளர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய புதினங்களுக்காக அறியப்படுபவர். தமிழ் நவீன கிளாஸிக் எழுத்தாளர்களுள் முக்கியமானவராக அறியப்படும் ஜெயமோகன், தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அவ்வபோது விமர்சனங்களையும் சந்தித்து வருவதை தமிழ் வாசகர் உலகம் நன்கு அறியும். கடந்த மாதம் வெளியான இவரது 'பத்துலட்சம் காலடிகள்' என்ற சிறுகதையில், ஔசேப்பச்சன் என்ற கதாபாத்திரம் பேசும், "உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்” என்ற வசனம் பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து பலரும் ஜெயமோகனின் அழகு குறித்த அரசியலையும் அவரது பார்வையையும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த சர்ச்சை ஓய்ந்து முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த மே 29ஆம் தேதி ஜெயமோகனின் வலைதளத்தில் வாசகர் கடிதம் என்ற பகுதியில், பெயர் குறிப்பிடாமல் 'ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கடிதம் வெளியானது. அதில், இடதுசாரிகள் குறித்த முன்னாள் இடதுசாரியின் பார்வையும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீதான விமர்சனமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்கடிதம் இவ்வாறு துவங்குகிறது:

"இந்த இடதுசாரிக் குழுக்களின் உண்மையான அரசியல் என்ன? நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களிடமிருந்து விடுதலைபெற்று வெளியே வந்தவன். அன்றுமுதல் இதைத்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். என்னைப்போலவே வெளியே வந்தவர்கள் பலர் உண்டு. அவர்களெல்லாம் இவர்கள் அயோக்கியர்கள் என்பார்கள். எனக்கு அப்படிச் சொல்லவும் தோன்றவில்லை. இவர்களை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என்று தோன்றுகிறது. ஆனால் புரிந்துகொள்ள ஒரு வழி உண்டு. இவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்துக்கொள்வது. நான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் இவர்கள்" என ஆரம்பிக்கும் இந்தக் கடிதம் இடதுசாரிகளையும், கிராமத்திலிருந்து வரும் இளைஞர்களையும், தலைவர்களையும் ஒருபக்க சார்புடன் விமர்சித்தபடியே செல்கிறது.

இதனை தொடர்ந்து, இக்கடிதம் சமூகவலைதளங்களில் விவாதமானது. எழுத்தாளரும் மார்க்சிய சிந்தனையாளருமான யமுனா ராஜேந்திரன் தனது முகப்புத்தகத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும், ஜெயமோகன் தான் இதை எழுதியும் உள்ளார் என விமர்சித்துள்ளார். பல எழுத்தாளர்களும் ஜெயமோகன் தளத்தில் வந்த கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்(தமுஎசக) நேற்று(ஜூன் 4) ஜெயமோகனின் மொட்டைக்கடுதாசிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. "ஜெயமோகனின் மொட்டைக்கடுதாசியும் ஆளுமைச் சிதைப்பும் - தமுஎகச கண்டனம்" என்ற தலைப்பில் வெளியான கண்டன அறிக்கையின் முழுவிவரம் பின்வருமாறு:

கடந்த மே29 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் அநாமதேயக் கடிதமொன்றை வெளியிட்டிருக்கிறார். தனது வலைத்தளத்தில் எதையும் பதிவேற்றுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். கடிதத்தில் வழக்கம்போல அறம் புறம் என அரைத்திருந்தால் நாம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் இக்கடிதம் இடதுசாரி அமைப்புகளையும் அவற்றின் ஊழியர்களையும் பற்றி மிகமிக தரம் தாழ்ந்த வார்த்தைகளில் பேசுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள், அடிமைகள், அரைகுறையாக படித்தவர்களால்தான் தர்க்கம் செய்து எதிரியை திக்குமுக்காடச் செய்யமுடியும் என நம்புபவர்கள் என்றும் பரிகசிக்கிறது. இடதுசாரி துவேஷம் என்கிற அவரது இழிநோக்கத்திற்கு இசைவான அவதூறுகள் நிறைந்த இக்கடிதம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பற்றிய அவதூறையும் அபாண்டமான குற்றச்சாட்டையும் பரப்புகிறது.

தமிழின் மிக முக்கியமான படைப்பாளியும் செயற்பாட்டாளருமான செயப்பிரகாசத்துக்கு சாதி அபிமானம் உண்டு என எவ்வித முகாந்திரமுமின்றி வன்மமான பொய்யொன்றைச் சொல்கிறது இக்கடிதம். பா.செயப்பிரகாசத்தின் படைப்புகளிலோ செயல்பாடுகளிலோ சாதியத்தை நியாயப்படுத்தும் கேடுகள் எதுவும் இல்லாத நிலையில் அவரது ஆளுமையைச் சிதைப்பதற்காக ஓர் அநாமதேயக் கடிதத்தின் பெயரால் ஜெயமோகன் திட்டமிட்டதொரு இழிமுயற்சியை மேற்கொண்டுள்ளார் எனக் கருதி கண்டனம் தெரிவிக்கிறது தமுஎகச.

இந்தக் கடிதத்தை எழுதியவர் முன்னாள் இடதுசாரியாம், பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால் பெயரை வெளியிடவில்லையாம். ஜெயமோகனின் வலைத்தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரியும் அவர் நாலுவரிக் கடிதத்திற்கு நாற்பது பக்கம் எழுதுவார் என. ஆனால் இந்த அவதூறு கடிதத்திற்கு ஒற்றை வார்த்தை கூட பதில் எழுதவில்லை. கடிதத்தின் கருத்து தன்னுடையதில்லை என்று காட்டிக்கொண்டு கவனமாக விலகுவதற்கான குயுக்தியே பதில் அளிக்காமல் தவிர்த்திருப்பது. அப்படியானால் அவர் கடிதத்தை பதிவேற்றியிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? கடிதத்தை தன்பக்கத்தில் பதிவேற்றியதின் மூலம் அதன் கருத்தில் தனக்குள்ள உடன்பாட்டை அவர் பொதுவெளியில் தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது? இந்தப் பெயரற்ற கடிதத்தை எழுதியதே இவர்தான் எனும் சந்தேகம் வலுப்படுவதையும் தவிர்க்கமுடியவில்லை.

இத்தகைய வன்மம் ஜெயமோகனிடம் வெளிப்படுவது இது முதல்முறையல்ல. எழுத்தாளர்களை இலக்கிய ஆளுமைகளை கேலி பேசி தீராநதியில் ஒரு தொடரையே எழுதியவர்தான் இந்த ஜெயமோகன். பகடி எனவும் இந்த அபத்தங்களை பொய்களை உளறல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் பதிலடி கொடுக்காமல் பலரும் கடந்துபோனதால் ஊக்கம்பெற்ற ஜெயமோகனின் அவதூறுகளையும் அதன் அரசியலையும் பட்டியலிட்டால் அறிக்கை கொள்ளாது.

சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு அரசியல் பொருளாதார தத்துவார்த்தத் தளங்களில் மார்க்ஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை கொச்சைப்படுத்த அவரது தனிப்பட்ட வாழ்வின் மீது அவதூறு செய்தவர், மார்க்ஸிய பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை மற்றும் தோழர் வ.கீதா ஆகியோரை பவுண்டேசனில் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறவர்கள் எனப் பழித்தவர், நடிப்பிற்கும் சிவாஜிக்கும் சம்பந்தமில்லை, அண்ணாவும் கலைஞரும் எழுதியதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை, இன்குலாப் இதுவரை ஒரு கவிதைகூட எழுதியதில்லை என்று ஜெயமோகனது அவதூறு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.

உலகின் மிக முக்கியமான செயற்பாட்டாளர் அருந்ததிராயை குருவிமண்டை என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார். தி.க.சிக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் இது தி.க.சியின் படைப்பிற்கு கிடைத்த விருதல்ல, அவர் எழுதிய காக்காசு கடுதாசிகள் பெற்று தந்த விருது என ஏகடியம் பேசினார். அவதூறுகளின் பட்டியல் மிக நீண்டது.

தன்னுடன் இருப்பவர்களோடு கருத்து வித்தியாசம் வந்தபோது கீழ்த்தரமாக கதை எழுதவும் தயங்காதவர். சுந்தர ராமசாமியை நாய்சாமியார் என நக்கல் செய்தார். உருது பேசும் நொண்டிநாய் மூஞ்ல மூத்திரம் பேஞ்சாக்கூட பொறுத்துக்கிடுவார் என மாற்றுத்திறனாளிகளைக் குறித்த குரூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமீப காலத்தில் அவருடைய எழுத்துக்களின் பலவீனத்தன்மையையும் சக்கையான வெற்று வர்ணணைகளே கதைகள் என அவர் நம்பத்துவங்கியிருப்பதையும் 69 கதைகளை வாசிக்கிற எவரும் உணர முடியும். கதைகளும் கலையும் அவரை விட்டு விலகி வெகுதூரம் சென்றிருப்பதால் இப்போது இம்மாதிரியான சில்லரை விளையாட்டுக்களில் இறங்கி கவனம் பெற அலைகிறார் என்கிற கூற்றையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கடந்த மிக முக்கியமான விசயம், அவதூறு செய்திட அவருடைய தேர்வு யார் என்பதுதான்.

பெண்களை இழிவாக பேசிய சங்கரமடம் குறித்து ஒற்றைக் கருத்தையும் உதித்ததில்லை. சங்பரிவாரங்கள் கலைப்படைப்புகளின் வெளிப்பாட்டை தடுத்து நிறுத்த வெறி கொண்டு இயங்கியதை கண்டுகொள்வதில்லை. பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களின் சிந்தனையாளர்கள், களப்பணியாளர்கள் என அவருடைய பகடி மற்றும் அவதூறு எல்லைக்குள் யாரெல்லாம் இருக்கிறார்கள், எவரெல்லாம் விலக்கம் பெறுகிறார்கள் என்பதில் இருந்து மிகத் தெளிவாக விஷயம் புரிகிறது. இந்துத்துவ கருத்தியலை இந்தியச் சமூகத்தின் பொதுக்கருத்து போல காட்டுவதற்கு சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் சங்பரிவாரத்தினரும் அவர்களது ஏவலாளர்களும் செய்துவரும் மோசடிகளையும் அவதூறுகளையும் கலை இலக்கியத் தளத்தில் செய்பவராக ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொண்டுள்ளார். சங் பரிவாரத்தின் வேலைப்பிரிவினையில் இவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலையின் ஒரு பகுதியாகவே பா.செயப்பிரகாசம் மீதான இந்த அநாமதேயக்கடித அவதூறு. இது ஜெயமோகனுக்கு அவருடைய கோட்பாட்டாளர்களால் தரப்பட்டிருக்கும் புராஜெக்ட் என்பது இவரின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது. இனி இதுமாதிரியான அறமற்ற செயல்களை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பா.செயப்பிரகாசம் மீது அவதூறு செய்து அவமதிக்கும் மேற்சொன்ன கடிதத்தை வெளியிட்டமைக்காக அவரிடம் ஜெயமோகன் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும் என்றும் மதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிதைக்கும் வன்மத்தோடு தன்னுடைய வலைப்பக்கத்தை பயன்படுத்தும் இழிசெயலை கைவிட வேண்டும் எனவும் தமுஎகச வலியுறுத்துகிறது" என மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கமும், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவும் தமுஎசக சார்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.

-முகேஷ் சுப்ரமணியம்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon